பெரம்பலுார்:-அரியலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்த, 12 நாட்களில், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது.
அரியலுார் நகரில் வசிக்கும் கற்பகவள்ளி, 55, கடந்த, 2021ம் ஆண்டில், வீடு கட்டிய போது, வீட்டில் பொருத்த, பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில், தண்ணீர் குழாய்கள், இதர பொருட்களை, 47 ஆயிரம் ரூபாய் செலுத்தி வாங்கினார்.
ஆனால், குழாய்கள் பொருத்தப்பட்ட மூன்று மாதத்தில் கசிவு, உடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. குழாய் உற்பத்தியாளருக்கு புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், சம்பந்தப்பட்ட கடை மற்றும் பொருட்கள் விற்பனை நிறுவனம் மீது, கடந்த 14ம் தேதி, அரியலுார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கற்பகவள்ளி வழக்கு தொடுத்தார்.
இதையடுத்து, 24ம் தேதி, சமரச அறிக்கை, மாவட்ட ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அன்றைய தினமே, குழாய்களை உற்பத்தி செய்த நிறுவனத்தினர், வழக்கு தாக்கல் செய்தவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையை, ஆணையம் உத்தரவுபடி வழங்கினர்.
இது தொடர்பாக, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று முன் தினம், இறுதித் தீர்ப்பு வழங்கியது.
அதில், 'குழாய் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனம், அந்த பெண்ணுக்கு விற்பனை செய்த பொருள்களை திரும்ப பெற்று, ஒரு வாரத்துக்குள் தரமான பொருட்களை வழங்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தது.