''தமிழக உள்ளாட்சித் துறையில் கட்டட அனுமதிக்கு நடந்த லஞ்சத்தை எதிர்த்ததால், என்னை பழி வாங்கியுள்ளனர்'' என, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராகப் பணியாற்றியவர் அறிவுடை நம்பி, 49.
அதற்கு முன, வால்பாறை நகராட்சியில் பணியாற்றி வந்த இவரை, பணி மாறுதல் செய்தபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக 'வாட்ஸ் ஆப்' வாயிலாக வீடியோ வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழ்நாடு நகரமைப்பு ஆய்வாளர் சங்கத்தின் மாநிலச் செயலராக இருக்கும் இவர், தமிழகத்தில் இதுவரை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கட்டட அனுமதிக்கு உள்ளாட்சித்துறையில் லஞ்சம் வாங்கப்படுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
நெல்லியாளம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராகப் பணி செய்த இவரை, டிஸ்மிஸ் செய்து, கடந்த வாரத்தில் உத்தரவு வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியில், 2021ல் அவர் பணியாற்றிய போது, பொதுமக்கள் மத்தியில் கலவரத்தைத் துாண்டும் விதமாக ஆடியோ வெளியிட்டார்.
அது தொடர்பான விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, கடந்த வாரத்தில் அவரை டிஸ்மிஸ் செய்து, துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி கமிஷனர் குமார்சிங் உத்தரவிட்டிருந்தார்.
அவருக்கு மேல் முறையீடு செய்வதற்கு, 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நமது நிருபரிடம், அறிவுடைநம்பி கூறியதாவது:
என் ஆடியோ பதிவு, கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தாக பொய்க்காரணம் கூறப்பட்டுள்ளது. அதன் படி, என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
என் ஆடியோ பதிவால், அங்கு கலவரம் எதுவும் நடக்கவில்லை.
இந்த திராவிட மாடல் ஆட்சியில், உள்ளாட்சித் துறையில் கட்டட அனுமதிக்கு லஞ்சம் வாங்குவதை நான் எதிர்த்தேன்.
'கட்டட அனுமதிக்கு லஞ்சம் வாங்கித் தர மாட்டோம்' என்று எங்கள் சங்கத்தின் சார்பில் தீர்மானம் போட்டோம். இதனால் தான், என் மீது தனிப்பட்ட வெறுப்பு ஏற்பட்டு, உரிய காரணமின்றி என்னை டிஸ்மிஸ் செய்துள்ளனர்.
இதை எதிர்த்து, கோர்ட்டுக்குச் சென்று சட்டரீதியாக போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
'சட்டரீதியான போராட்டத்திற்குப் பிறகும் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்' என்று அறிவுடைநம்பியிடம் கேட்டபோது, ''இந்த அரசின் ஊழலை, லஞ்சத்தை எதிர்த்துப் போராடி வரும் பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம் என் நிலையை விளக்கவுள்ளேன். அவர் அனுமதித்தால், பா.ஜ.,கட்சியின் தலைமைக்கழகப் பேச்சாளராக பணியாற்றத் தயாராக உள்ளேன்,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -