புதுடில்லி:“தண்ணீர் கட்டண நிலுவைத் தொகையை செலுத்த, ஒரே முறையில் செலுத்த தீர்வுத் திட்டம் கொண்டு செயல்படுத்தப்படும்,” என, புதுடில்லி தண்ணீர் வாரிய துணைத் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறினார்.
இதுகுறித்து, புதுடில்லி தண்ணீர் வாரிய துணைத் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியிருப்பதாவது:
தண்ணீர் கட்டண நிலுவைத் தொகையை ஒரு மாதத்துக்குள், ஒரே முறையில் செலுத்தும் தீர்வுத் திட்டத்தின் கீழ், 10 ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகள் என, தண்ணீர் பயன்பாட்டைக் கணக்கிட்டு, அதன் சராசரி நுகர்வைக் கணக்கிடுவோம்.
அதன் அடிப்படையில், ஒரு நாள் உபயோகத்தை கணித்து புதிய பில் வழங்கப்படும். உதாரணமாக, நிலுவைத் தொகை 50 ஆயிரம் ரூபாய் என்றால், அதை கணக்கீட்டு அடிப்படையில் 25 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி நிலுவைத் தொகையை தீர்த்துக் கொள்ளலாம். அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
நிலுவைத் தொகையை செலுத்தியவர்களின் வீடுகளில் மீட்டர் ரீடிங் மீண்டும் பூஜ்ஜியத்துக்கு கொண்டு வரப்படும். அன்று முதல் வழக்கம்போல் மாதந்தோறும் தண்ணீர் கட்டணத்தை செலுத்தத் துவங்க வேண்டும்.
குடிநீர் வினியோகம் பாதிப்பு
நிலத்தடி நீர்த்தேக்கம் மற்றும் பூஸ்டர் நீரேற்று நிலையங்களில் நேற்று, சுத்தப்படுத்தும் பணி துவக்கப்பட்டது.
இதனால், புதுடில்லியின் மேற்கு, தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள ஜனக்புரி, மெஹ்ராலி, மங்கோல்புரி, ரோஹிணி, ஷாலிமார் பாக், விஜய் நகர், ரூப் நகர், ரிதாலா மற்றும் பழைய ராஜிந்தர் நகர், சர் கங்கா ராம் மருத்துவமனை மற்றும் டில்லி பல்கலை பகுதிகளிலும் இன்றும் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் என புதுடில்லி குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.