நூஹ்:ஹரியானாவில், டிரைவரை கொலை செய்து காரை கடத்திச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
ஹரியானா மாநிலம் குண்ட்லி - மானேசர் பல்வால் விரைவுச்சாலையில் துலாவத் சுங்கச் சாவடி அருகே கடந்த 19ம் தேதி, ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
இறந்து கிடந்தவர் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தேவ்தா என்ற கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் தேவேந்திரர்,35, என்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், தேவேந்திரரை மூன்று பேர் சேர்ந்து சால்வையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, காரை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹரியானா மாநில குற்றப் புலனாய்வு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சிந்து, ராபின் என்ற பண்டிட், சேகர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். கார் டிரைவர் தேவேந்திரரை கொலை செய்து காரை கடத்தியதை ஒப்புக் கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.