ஷாஜஹான்பூர்:உத்தரப் பிரதேசத்தில், 60 வயது பெண், தன் மகன் வயதை உடைய மருமகனை திருமணம் செய்து கொள்வதற்காக அவருக்கு நடக்க இருந்த திருமணத்தை சதி செய்து தடுத்தது அம்பலம் ஆகியுள்ளது. இதுகுறித்து, போலீசார் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உ.பி., மாநிலம் ஷாஜஹான்பூரில் வசிக்கும் ஷபானா,60, கணவரை இழந்தவர். இவருக்கு, டேனிஷ், அஸ்ரப் மற்றும் மகள் ரூஹி ஆகியோர் உள்ளனர்.
கணவரை இழந்த ஷபானா, மருமகன் ஆசிப்,42,பை ஒருதலையாக காதலித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால், ஆசிப் மறுத்து விட்டார். இந்நிலையில், ஆசிப்புக்கு வேறு ஒரு இடத்தில் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஷபானா, ஆசிப்புக்கு ஏற்கனவே விவாகரத்து ஆனது போல போலி சான்றிதழை தயாரித்து, அந்தப் பெண் வீட்டாருக்கு அனுப்பினார். இதையடுத்து, அந்தத் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, போலீசில் ஆசிப் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் ஷபானா, அவரது மகன்கள் டேனிஷ், அஸ்ரப் மற்றும் மகள் ரூஹி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் ஷாஜஹான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.