உடுமலை:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், தை கிருத்திகை விழாவையொட்டி, கார்த்திகை விழா மன்றம் சார்பில், நகைச்சுவை பேருரை நடந்தது. நிகழ்ச்சியில், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கத்தலைவர் பாபு தலைமை வகித்தார். முன்னாள் அறங்காவலர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
புலவர் சாந்தாமணி, 'நகையும், சுவையும்', என்ற தலைப்பில், பேசியதாவது: மனிதனின் வாழ்வில், நகைச்சுவை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு மனிதன் நாள்தோறும், 13 முறை மட்டுமே, சிரிப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்', என முன்னோர்கள் தெரிவித்தனர். நன்றாக வாய் விட்டு சிரிக்கும் போது, உடலிலுள்ள, 380 தசைகள் சுருங்கி விரியும்; மாரடைப்பு வராது.
எனவே, வாய் விட்டு சிரித்து, கவலைகளை மறக்க வேண்டும்,' இவ்வாறு பேசினார். கார்த்திகை விழா மன்ற நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.