திருத்தணி:திருத்தணியில் இருந்து, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு அம்மையார்குப்பம், நகரி மற்றும் குருவராஜபேட்டை ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதிகாலை மற்றும் காலை நேரத்தில் சரியாக பேருந்துகள் இயக்கப்படாததால் பயணியர் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், முருகன் கோவிலில் நடந்த தைக்கிருத்திகை விழாவிற்கு மேற்கண்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் முருகன் மலைக்கு வந்தனர்.
பின், மூலவரை தரிசித்த பின், பெரும்பாலான பக்தர்கள் இரவு தங்கினர்.
நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு மலையில் இருந்து தங்களது கிராமங்களுக்கு செல்வதற்காக அதிகளவில் பெண்கள் கடும் பனியில், திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.
ஆனால், காலை 6:00 மணி வரை மேற்கண்ட இடங்களுக்கு சரியாக பேருந்து இயக்காததால் பல மணி நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து சென்றனர். எனவே, அரசு போக்குவரத்துத் துறை அதிகாரிகள், கிருத்திகை மற்றும் முக்கிய விழாக்களின் போது மேற்கண்ட ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.