சென்னை:பெரிய வெங்காயம் சாகுபடி மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் அதிகளவில் நடந்து வருகிறது. அங்கிருந்து, பல மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இம்மாநிலங்களில் வெங்காய விளைச்சல் குறையும்போது, அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரிக்கும். அத்தகைய நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.
தற்போது, மஹாராஷ்டிரா, ஆந்திராவில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது. புதிய வெங்காயங்கள் அறுவடை செய்யப்பட்டு சந்தைகளுக்கு, அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால், வெங்காயம் விலை வேகமாக சரிந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில், மஹாராஷ்டிரா வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆந்திரா வெங்காயம் கிலோ 10 முதல் 12 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் விலை குறைந்துள்ளதால், அவற்றை ஓட்டல்கள், பாஸ்ட்புட் உணவகங்கள், கேன்டீன்கள் நடத்துவோர் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.
பொதுமக்களும் தங்கள் தேவைக்கு தாராளமாக வெங்காயம் வாங்கிச் செல்கின்றனர்.
சந்தைகளுக்கு மட்டுமின்றி சாலையோர கடைகள், வாகனங்களில் வைத்து, 5 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.