கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி மின் வாரிய அலுவலகம் அருகே, அக் ஷயா அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம், நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு, 10 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் சொத்து வரி பாக்கி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ளது.
இது தொடர்பாக, நகராட்சி சார்பில், பலமுறை கடிதம் மூலம் தகவல் தெரிவித்தும், நகராட்சி ஊழியர்கள் நேரில் சென்று தகவல் தெரிவித்தும், பாக்கி தொகையை கட்டாமல், நகராட்சியை ஏமாற்றி வந்துள்ளது.
இதனால், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள தனியார் நிறுவன கட்டடத்தின் நுழைவாயிலை மூடி, 'சீல்' வைத்து, ஜப்தி செய்யப்பட்டது தொடர்பாக, நகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இது குறித்து, நகராட்சி கமிஷனர் இளம்பரிதி கூறியதாவது:
சொத்து வரி பாக்கி வைத்துள்ளோர் நகராட்சி அலுவலகத்தில், நேரில் அல்லது நகராட்சி இணையதளத்தில் உடனடியாக செலுத்த வேண்டும்.
செலுத்த தவறும் பட்சத்தில், இது போன்ற நடவடிக்கைகள் தொடரும். எனவே, பொதுமக்கள் சொத்து வரியை உரிய காலத்திற்குள் செலுத்தி, இது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.