சென்னை, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணியில், மூன்று வீராங்கனையர் உட்பட, தமிழக வீரர்கள் ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.
கஜகஸ்தானின் அஸ்தானா பகுதியில், 10வது ஆசிய இண்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, வரும் 10ம் தேதி துவங்க உள்ளது. போட்டியில் இந்தியா உட்பட 31க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தடகள வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 26 தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில், இந்தியா சார்பில் 26 வீரர் - வீராங்கனையர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இதில், தமிழகத்தில் இருந்து தகுதி பெற்று பங்கேற்க உள்ள மூன்று வீராங்கனையர் உட்பட ஏழு வீரர்கள் பட்டியலை, தமிழ்நாடு தடகள சங்கம் நேற்று வெளியிட்டது.
அதில் இலக்கிய தாசன், ஜெஸ்வின் ஆல்ட்ரின், பிரவீன் சித்திரவேல், சுப்பிரமணியம், அர்ச்சனா, ரோஸி மீனா மற்றும் பவித்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், இந்திய அணியின் மேலாளராக தமிழக தடகள சங்க செயலர் லதா இடம் பெற்றுள்ளார். தமிழக வீரர் - வீராங்கனையர் பஞ்சாப், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் இந்தியா பயிற்சி முகாமில் பங்கேற்று, பயிற்சி பெற்று வருகின்றனர்.