விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டத்தில், 24.50 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டி பேரூராட்சி கூட்டம் சேர்மன் அப்துல் சலாம் தலைமையில் நடந்தது.
துணைச் சேர்மன் பாலாஜி, செயல் அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன் வரவேற்று தீர்மானங்களைப் படித்தார்.
கூட்டத்தில், வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளை பழுது பார்த்தல், குளத்து வீதியில் சமுதாய கழிப்பிடம் பழுது பார்த்தல், பெரிய காலனியில் கரும காரிய கொட்டகை கட்டுதல், வளம் மீட்பு பூங்காவிற்கு வேலி அமைத்தல் உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு 24.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துப்புரவு மேற்பார்வையாளர் ராமலிங்கம், நியமன குழு தலைவர் சர்க்கார் பாபு, கவுன்சிலர்கள் கனகா, சுரேஷ், ரேவதி, ஆனந்தி, வீரவேல், சுதா, சுபா, வெண்ணிலா உட்பட பலர் பங்கேற்றனர்.