சென்னை, சென்னை மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டி.எம்.சி.ஏ., என்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், தொடர்ந்து பல்வேறு பிரிவினருக்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சோமசுந்தரம் கோப்பைக்கான சென்னை பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, இம்மாதம் 15ம் தேதி துவங்க உள்ளது. போட்டியில், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இதில், 2008 செப்., 1ம் தேதிக்குப் பின் பிறந்த, 14 வயதுக்கு உட்பட்டோருக்கு மட்டுமே போட்டிகள் நடக்கின்றன. மொத்தம் 32 அணிகள் மட்டுமே தேர்வு செய்யப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி அணிகள், வரும் 9ம் தேதிக்குள், www.tnca.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.