திண்டிவனம், : திண்டிவனத்தில் வாடகை பாக்கி வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கச் சென்ற கமிஷனருடன், கடைக்காரர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
செஞ்சி சாலையில் பஸ் நிறுத்தம் அருகே பர்மா அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆனந்தகுமார் என்பவர் கூல் டிரிங்க்ஸ் கடை வைத்துள்ளார். இவருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை விட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்திற்கு வாடகை போடப்பட்டுள்ளது. இவர், கடந்த 2014ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தவில்லை. 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி உள்ளது.
இதனால், அந்த கடைக்கு நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் சீல் வைக்கச் சென்றனர்.
இதற்கு, ஆனந்தகுமார் மற்றும் தி.மு.க., வழக்கறிஞர் அசோகன் எதிர்ப்பு தெரிவித்து, கமிஷனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.