திருப்பூர்:தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கறவை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுத்தும் 'புரூசெல்லோசிஸ்' நோய்க்கான தடுப்பூசி முகாம் நடக்கிறது.
'புரூசெல்லோஸ்' என்பது பசு மற்றும் எருமைகளில், கருச்சிதைவு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோய். 'புரூசெல்லா அபார்டஸ்' என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகள், தீவிர காய்ச்சல், சினை ஈனும் தருவாயில் கருச்சிதைவு ஏற்படும்.
குறிப்பாக, ஐந்து முதல், 8வது மாதம் வரை கருச்சிதைவு ஏற்படும். மீண்டும் எளிதில் சினை பிடிக்காமல், பால் உற்பத்தி குறைவு ஏற்பட்டு, பொருளாதார இழப்பு உருவாகும். இந்நோய்வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் போது, மனிதர்களுக்கும் இந்நோய் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக, முதன்முறையாக 'புரூசெல்லோசிஸ்' எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு, தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. நான்கு மாதம் முதல், எட்டு மாத வயதுள்ள கிடாரி கன்றுகளுக்கு, இன்று (1 ம் தேதி) முதல் 28 ம் தேதி வரை, இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தடுப்பூசியை ஒரே ஒருமுறை செலுத்திக்கொண்டால், 'கிடாரி'கன்றுகளுக்கு, ஆயுள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும், இந்த தடுப்பூசியை செலுத்த கூடாது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.