மேலுார் : நிலத்தை உழுவது, நெல் வயலில் சேற்றை சமப்படுத்துவது என இரு வேலைகளை செய்வதற்கு 'தொழி புரட்டி' என்ற கருவியை மதுரை மாவட்டம் மேலுார் மாணவி திவ்யதர்ஷினி 18, கண்டு பிடித்து அசத்தியுள்ளார்.
மேலுார் செந்தில் மகள் திவ்யதர்ஷினி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் தனியார் வேளாண் கல்லுாரியில் பி.எஸ்சி., விவசாயம் முதலாம் ஆண்டு படிக்கிறார். சிறு வயது முதல் விவசாயம் சார்ந்த கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர். நெல் சாகுபடிக்கு நடவு செய்யும்முன் சேறும் சகதியுமான 'தொழி' நிலத்தை உழுவதற்கும், பிறகு இரும்பு பிளேட்டை டிராக்டரில் பொருத்தி, சமப்படுத்தவும் 'ரொட்டவேட்டர்' என்ற கருவி உள்ளது. ஆனால் இவ்வேலைகளை ஒரே நேரத்தில் குறைந்த செலவில் செய்ய 'தொழி புரட்டி' என்னும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார் திவ்யதர்ஷினி.
அவர் கூறியதாவது : டிராக்டரில் இந்த தொழி புரட்டி இயந்திரத்தை மாட்டி உழவு செய்யலாம். அதே வேளையில் இயந்திரத்தின் பின்னால் ஹைட்ராலிக் சிலிண்டர் மூலம் இணைத்துள்ள தகடு, உழுத நிலத்தில் உள்ள மேடு பள்ளங்களை சமப்படுத்தும் வகையில் வடிவமைத்துள்ளேன். இவ்வாறு 2 வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்வதால் நேரம், டீசல் செலவு மிச்சமாகும். தற்போது பயன்பாட்டில் உள்ள ரொட்டவேட்டர் விலை ரூ. 1.20 லட்சம். ஆனால் இந்த 'தொழி புரட்டி' விலை ரூ.65 ஆயிரம்தான். ரொட்டவேட்டரில் அதிக தேய்மானத்தால் பிளேட், பேரிங் அடிக்கடி மாற்ற வேண்டியதிருப்பதால் பராமரிப்பு செலவு அதிகம். தொழி புரட்டியில் கம்பியால் செய்யப்பட்டுள்ளதால் தேய்மானம், பராமரிப்பு செலவு குறைவு, என்றார்.
கடந்தாண்டு இவர் சீமைக்கருவேல மரத்தை வேருடன் அகற்றும் இயந்திரம் கண்டுபிடித்து பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவியின் கண்டுபிடிப்பு விவசாயிகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவரை பாராட்ட: 99444 37098.