திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே ஒரு கிராமத்தில், நுால் மில் ஒன்றின் குடியிருப்பில் தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்றன. இதில், ராயர்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன், 21, வசித்து வந்தார். கடந்தாண்டு ஏப்ரலில், பக்கத்து வீட்டில் வசித்த மற்றொரு தொழிலாளியின் ஒன்றரை வயது குழந்தையிடம் இவர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதில், உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை, பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, போலீசில் புகார் அளித்தனர்.
அவிநாசி மகளிர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, இளங்கோவனை, 'போக்சோ' சட்டப் பிரிவில் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட் நீதிபதி பாலு, இரு பிரிவுகளின் கீழ், தலா, 20 ஆண்டு என, மொத்தம், 40 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தாயை கொன்ற மகனுக்கு ஆயுள்
சிவகங்கை மாவட்டம் மணலுார் அருகே ஒத்தவீட்டை சேர்ந்தவர் மூக்கையா. இவரது மனைவி சீனியம்மாள் 56. இவர்களது மகன்கள் சரவணன் 45, முருகன் 42. 2018ல் சரவணனின் தம்பி முருகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளனர். பெண் கேட்டு செல்லும் இடத்தில் எல்லாம், சரவணன் மனைவியை பிரிந்து வாழ்வது பற்றி கேட்டு முருகனுக்கு பெண் தர மறுத்துள்ளனர். இதில் அதிருப்தியான சரவணனின் தாய் சீனியம்மாள், மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்து சேர்ந்து வாழ சரவணனிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார்.
2018 ஜூன் 18 மதியம் 3:00 மணிக்கு இது தொடர்பாக சீனியம்மாள், சரவணன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமுற்ற சரவணன் வீட்டில் இருந்த கல்லை எடுத்து சீனியம்மாளின் தலையில் போட்டு கொலை செய்தார். திருப்புவனம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதி சுமதி சாய் பிரியா, தாயை கொலை செய்த சரவணனுக்கு, ஆயுள் தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்தார்.
முதிய தம்பதி கொலை: நகைகள் கொள்ளை
பெரம்பலுார் மாவட்டம், தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம், 75. அவரது மனைவி மாக்காயி, 70. தம்பதிக்கு, நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமானதால், பிற இடங்களில் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கிய இருவரும், நேற்று காலை, கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மாக்காயி அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடலை மீட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வி.களத்துார் போலீசார் வழக்கு பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர். நகை மற்றும் பணத்துக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ரூ.7 லட்சம் பறிப்பு: ரவுடிகள் கைவரிசை
சேலம், அசாத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 47, வ.உ.சி., மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்கிறார். இவரது மாமியார் சாரதா, 70. வீராணத்தில் வசிக்கும் இவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக, ஜன., 20, இரவு, 7:00 மணிமுதல், 9:00 மணி வரை, மாமியார் வீடு உள்ள வீராணத்தில், காலி நிலத்தில் பரிகார பூஜை செய்தனர். இரண்டாம் கட்ட பூஜையை, கடந்த, 27, இரவு, 8:00 மணிக்கு செய்தனர்.
அப்போது, அங்கு வந்த காரிப்பட்டியைச் சேர்ந்த ரவுடி பிரபு, இளவரசன், சதீஷ், தினேஷ், மனோகரன், செந்தில் ஆகியோர், பரிகார பூஜை செய்த செந்தில்குமார் உட்பட ஆறு பேரை தாக்கி, அவர்கள் வைத்திருந்த, 7 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர். காயமடைந்த செந்தில்குமார், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணப்பறிப்பில் ஈடுபட்ட கும்பலை தேடுகின்றனர்.
தேசிய கீதத்தை மதிக்காத எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
நாமக்கல் - சேலம் சாலை, பொம்மக்குட்டைமேட்டில், கடந்த, 28ம் தேதி, தமிழக அரசு சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.நாமக்கல் கலெக்டர், அரசுத்துறை உயர் அதிகாரிகள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். விழா முடிவில், தேசிய கீதம் ஒலித்தது. அப்போது அனைவரும் எழுந்து நின்று, மரியாதை செலுத்தினர்.
![]()
|
ஆனால், விழா மேடை அருகே இருக்கையில் அமர்ந்திருந்த, நாமக்கல் ஆயுதப்படை போலீஸ் எஸ்.ஐ., சிவப்பிரகாசம், மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.தேசீய கீதம் ஒலிப்பதைக் கூட கவனிக்காமல், தன்னை மறந்து அவர் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்த, 'வீடியோ' சமூகவலைதளங்களில் பரவின. இதையடுத்து, சிவப்பிரகாசத்தை, நாமக்கல் எஸ்.பி., கலைச்செல்வன், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
பாக்., மசூதி தற்கொலை படை தாக்குதல்: பலி 100
பாகிஸ்தான் மசூதியில், நேற்று முன்தினம் மதிய வேளை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் ௬௧ பேர் பலியாகி இருந்த நிலையில், நேற்று பலி எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. பலத்த காயமடைந்த 221 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமானத்தில் அரை நிர்வாணம்; இத்தாலி பெண் அதிரடி கைது
அபுதாபியில் இருந்து, மும்பைக்கு வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் அடாவடியாக நடந்து கொண்டதுடன், விமான ஊழியர்களை தாக்கிய, பவோலா பெருச்சியோ, 45, என்ற இத்தாலி பெண்ணை மும்பை போலீசார் கைது செய்தனர்.
பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை
புதுடில்லியில் உள்ள ஹன்ஸ்ராஸ் சேத்தி பூங்கா அருகே, நேற்று இரு மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், கல்காஜி பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவர், கத்தியால் குத்தப்பட்டார். இதில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சிகிச்சை பலனின்றி அந்த மாணவர் உயிரிழந்தார்.
மகளை கர்ப்பமாக்கிய காமுகனுக்கு மூன்று 'ஆயுள்'
கேரளாவில், தன் சொந்த மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மதரசா ஆசிரியருக்கு, மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 6.6 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, விரைவு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
Advertisement