புதுடில்லி, 'நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2023 - 24ம் நிதியாண்டில், 6 - 6.8 சதவீதமாக குறையும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
அதற்கு முன்னதாக, நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை, அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லி.,யில் நேற்று தாக்கல் செய்தார்.
இதன் விபரம்:
கொரோனா பெருந்தொற்று பரவல், ரஷ்யா - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் முழுதும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு அமெரிக்க சந்தைகளின் மூலதனத்தை அதிகரித்தது.
இதன் காரணமாக, பெரும்பாலான நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது. இது நம் நாட்டின் சி.ஏ.டி., எனப்படும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரித்ததுடன், பணவீக்க அழுத்தங்களையும் அதிகரித்தது.
கொரோனா பெருந்தொற்று பரவல் குறைய துவங்கிய பின், ஏப்., 2021 - மார்ச் 2022 காலகட்டத்தில் நம் பொருளாதாரம் முன்னேறியது.
உலக அளவில் ஒட்டுமொத்தமாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, முன்னெப்போதும் இல்லாத பணவீக்கம், நிலையற்ற சந்தைகள் போன்ற சிக்கல்களுக்கு மத்தியிலும், நம் நாட்டின் மூலதனச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் சிறப்பாகவே இருந்தன.
கடந்த 2022ம் நிதியாண்டு உடன் ஒப்பிடும்போது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது.
இதன் விளைவாக திரட்டப்பட்ட மொத்த நிதி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட நிதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.
மேலும், 2023 - 24ம் நிதியாண்டில் பணவீக்க விகிதம் 6.8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நிதிக் கொள்கையில் பின்பற்றப்படும் இறுக்கம் காரணமாக, ரூபாய் மீதான அழுத்தம் தொடர வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
உலகப் பொருளாதார பலவீனம் காரணமாக ஏற்றுமதி எளிதாகி, உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து இறக்குமதிகள் அதிகரிக்கும் என்பதால், நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும்.
வலுவான நுகர்வு காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், தனியார் முதலீடு களை அதிகரித்தால் மட்டுமே வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டில் 8.7 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டான 2023 - 24ல் 6 - 6.8 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை குறித்து, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நேற்று கூறியதாவது:நம் நாட்டின் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் சிறப்பாகவே இருக்கும். இந்த தசாப்தம் எனப்படும் ௧௦ ஆண்டுகளின் இறுதியில், நம்முடைய பொருளாதார வளர்ச்சி, ௬.௫௭ சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.வரும், ௨௦௨௩ - ௨௦௨௪ம் நிதியாண்டில், விலைவாசி உயர்வு பொதுவாக கட்டுக்குள் இருக்கும். பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என எதிர்பார்க்கிறோம்.வரும் ஏப்ரலில் துவங்கும் நிதிஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ௬.௫ சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கும் நிலையில், தற்போதும் மிகப் பெரும் பொருளாதார வளர்ச்சி காணும் நாடாக இந்தியா இருக்கும்.கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல், ௧௦௦ அமெரிக்க டாலருக்கு கீழாக இருக்கும் வரையில், வரும் நிதியாண்டில் விலைவாசி உயர்வில் பெரிய அளவில் பாதிக்கப்படாது.பொது செலவீனங்களின் தரம் அதிகரித்துள்ளது. பட்ஜெட் பற்றாக்குறை தொடர்பான தரவுகள் மிகவும் வெளிப்படையாக உள்ளன.கடன், அனைத்து துறைகளிலும் சிறப்பான வளர்ச்சியை கண்டுஉள்ளது. குறிப்பாக எம்.எஸ்.எம்.இ., எனப்படும் சிறு, குறு மற்றும் மத்திய தொழில் துறையினருக்கான கடன் வழங்குவது, கடந்தாண்டு ஜன.,ல் இருந்து, ௩௦ சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வங்கி சாரா நிதி நிறுவனங்களின், என்.பி.ஏ., எனப்படும் வாராக் கடன், அதற்கு முந்தைய ௧௫ மாதங்களைவிட குறைவாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த ௨௦௨௨ - ௨௦௨௩ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வருவாய் ஆதாரங்களை பெருக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுஉள்ளது.தமிழகம், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள், சொத்து வரியை திருத்தி அமைத்தன. இதன் வாயிலாக மாநிலத்துக்கான வருவாய் உயர்ந்துள்ளது.தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா, அசாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசுகள், மின்சார கட்டணத்தை உயர்த்தின. இதன் வாயிலாக கூடுதல் வருவாய் ஆதாரம் கிடைத்து உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாநிலங்களின் செலவீனம் அதிகரித்தது. இதனால் வருவாய் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டன. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சில நிதியுதவிகளை செய்தாலும், இந்த மாநிலங்கள் தங்களுடைய வருவாய் ஆதாரங்களை உயர்த்தி கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களின் மதுபான கொள்கையை திருத்தின. லைசென்ஸ் கட்டணம், புதுப்பித்தல் கட்டணம், பரிசீலனை கட்டணம், பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டன. இதன் வாயிலாக கணிசமான வருவாய் மாநில அரசுக்கு கிடைத்தது.இதைத் தவிர பல மாநிலங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கின. மேலும் சொத்துக்களை பணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதுவும் வருவாய் ஆதாரம் பெருகுவதற்கு மாநிலங்களுக்கு உதவின.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.