புதுடில்லி:பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால் வரி குறைப்பு, வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு, வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட, மக்களை கவரும் அம்சங்களுடன் இந்த பட்ஜெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையடுத்து இன்று காலை, 11:00 மணிக்கு லோக்சபாவில், 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது என்பது குறித்து, மத்திய அரசு, அரசியல், தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
அடுத்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், தற்போதைய தே.ஜ., கூட்டணி அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது இருக்கும். நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட் இது.
வரிச்சலுகை
லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், மக்களை கவரும் வகையிலான புதிய அறிவிப்புகளுக்கும், சலுகைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் பஞ்சம் இருக்காது.
குறிப்பாக, நடுத்தர குடும்பத்தினரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மாதச்சம்பளதாரர்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பில் சலுகை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது 2.5 லட்சம் ரூபாயாக உள்ள வருமான வரி விலக்கு உச்சவரம்பை, 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக நல திட்டங்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு வரி குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் தனியார் ஜெட், ஹெலிகாப்டர், எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆபரணங்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம்,
சமூக நலத்துறை
நாட்டில் வேலை வாய்ப்பின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத வகையில் கடந்த மாதம், 8.3 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
எனவே, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறலாம். கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்படலாம்.
பயிர் காப்பீடு, கிராமப்புற சாலை கட்டமைப்பு, குறைந்த விலை வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்படலாம்.
உற்பத்தி துறை
உற்பத்தி துறையில், சர்வதேச அளவில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுத்து வருகிறது. இதன் காரணமாக பல தொழில்நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க ஆர்வம் காட்டுகின்றன.
இதுபோன்ற நிறுவனங்களுக்கு நிதிச் சலுகை அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம். குறிப்பாக கப்பல் கன்டெய்னர், பொம்மை போன்றவற்றின் தயாரிப்புகளுக்கு உற்பத்தி சார்ந்த சலுகைகள் நீட்டிக்கப்படலாம்.
இவை தவிர, அசையா சொத்து மற்றும் பட்டியலிடப்படாத பங்குகள் ஆகியவற்றுக்கு நீண்டகால மூலதன ஆதாய வரி நீட்டிக்கப்படலாம்.பெட்ரோலிய பொருட்களை, சந்தை விலையை விட குறைவாக விற்பனை செய்யும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடு அளிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
'கிரிப்டோ' சொத்துக்களுக்கான வரிகள் குறைக்கப்படலாம். சீனாவுடனான எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.