ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார்: எங்களுடன் பா.ஜ., கூட்டணியில் இருந்த போது, முஸ்லிம் மக்கள், அக்கட்சிக்கு ஓட்டளித்தனர். இதற்கு கூட்டணி தான் காரணம். இனி, பா.ஜ.,வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்கு பதில், என் உயிரைக்கூட மாய்த்துக் கொள்ள தயார்.
டவுட் தனபாலு: அடடா... இப்படி அவசரப்பட்டு, பா.ஜ., கதவை அடைச்சுட்டீங்களே... இனிமே, உங்க அரசை தாங்கிப் பிடிச்சிட்டு இருக்கிற, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி இழுப்புக்கு எல்லாம், நீங்க வளைஞ்சு கொடுக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
***
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு: அமைச்சர் நேருவும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்., வேட்பாளர் இளங்கோவனும் பேசுவது போல சமீபத்தில் வீடியோ வெளிவந்துள்ளது. அதில், 'செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிறோம். அதற்கு தலைவர்கள்வருவதால், முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?' என, கேட்டனர். அதை சில விஷமிகள் ஒட்டி, வெட்டி, பணம் பற்றி பேசியதாக பரப்புகின்றனர்.இது, எந்த வகையிலும், தி.மு.க., வெற்றியை பாதிக்காது.
![]()
|
டவுட் தனபாலு: 'அம்மா சத்தியமா நாங்க பணத்தை பற்றி பேசலை'ன்னு நீங்க சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க... எது, எப்படியோ... நீங்க கொடுக்க தயாராகிட்டீங்க...வாக்காளர்கள் வாங்க தயாராகிட்டாங்கன்னு தெரிஞ்சு தான்,'வீடியோ எல்லாம் எங்க வெற்றியை பாதிக்காது'ன்னு 'தெனாவெட்டா' சொல்றீங்க என்பது, 'டவுட்' இல்லாம தெரியுது!
***
தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் தனபாலன்: தி.மு.க., ஆட்சியில், 2022 பட்ஜெட் தாக்கலின் போது, 'ரேஷனில் சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி வழங்கப்படும்' என, அறிவித்தனர்; சொன்னதை செய்யவில்லை. அதை நிறைவேற்றி இருந்தால், 10 லட்சம் பனை தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட்டிருக்கும். 'பனை மரங்கள் வெட்டப்பட்டால், கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என, சட்டசபையில் அறிவித்தனர்; ஓராண்டில் ஒரு கைது கூட இல்லை.
டவுட் தனபாலு: தி.மு.க.,வினரிடம் கேட்டா, 'யாருமே பனை மரத்தை வெட்டலை... அதான் கைதே இல்லை'ன்னு குதர்க்க வாதம் பேசுவாங்க... சொன்னதை செய்யாத அரசியல் கட்சிகளுக்கு ஒரு போட்டி அறிவிச்சா, அதுல முதலிடம் தி.மு.க.,வுக்கு தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!