வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஈரோடு: 'தேர்தல் பொறுப்பாளர், பகுதி பொறுப்பாளர் பதவியை விரும்புவோர், தேர்தலில் போட்டியிட தயங்குவது என்ன நியாயம்?' என, அ.தி.மு.க., தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கடிந்து கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை, வில்லரசம்பட்டியில் நடந்தது.
கூட்டம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ஆரம்பத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி நிறுத்தப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. இதில், கள நிலவரத்தை கண்டு ராமலிங்கம், தென்னரசு தரப்பில் தயக்கம் காட்டினர். இதனால் நிர்வாகிகளிடம் அவர் பேசும்போது, 'தேர்தலில் வேட்பாளராக நிற்க பலரும் முன்வருவதில்லை. பல காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒதுங்குகிறீர்கள். கடந்த, 2021 தேர்தலின் போது போட்டியிட எத்தனை பேர் விருப்ப மனு வழங்கினீர்கள்.
![]()
|
'யார், யார் மூலம் சீட் பெற முயற்சி செய்தீர்கள் என தெரியும். அதே நேரம் இடைத்தேர்தலில் ஒதுங்குவது என்ன நியாயம்? தேர்தல் பணிக்குழு, பகுதி வாரியான குழுவில் முக்கிய பொறுப்பு வேண்டும் என கேட்டு பெறுவது என்ன நியாயம்?
'எந்த நிலையிலும் அ.தி.மு.க., தேர்தலை சந்திக்கும். எந்த நிர்வாகி பணி செய்யாவிட்டாலும், அவருக்கு மாற்றான நிர்வாகியை நியமித்து வேலையை செய்து முடிக்க இயலும். தேர்தலுக்கு பின் எந்தெந்த பகுதி, வார்டில் ஓட்டு குறைந்தது, கூடியது என பார்த்து, நல்ல முடிவுகள் எடுக்கப்படும்' என, காட்டமாக பேசினார். இதனால், ஈரோடு மாநகரத்தில் பல நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.