திருநெல்வேலி: தென்காசியில் விவசாயிகள் உட்பட அனைவரிடமும் நற்பெயர் பெற்று சிறந்த கலெக்டராக செயல்பட்ட ஆகாஷ் , 7 மாதத்தில் மாற்றப்பட்டுள்ளார். தி.மு.க.,வினருக்கு வளைந்து கொடுக்காததால் கிடைத்த பரிசு என தகவல் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் நேற்றுமுன்தினம் 11 கலெக்டர்கள் உட்பட 41 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு ,தாமிரபரணி நீர் வளம் மேம்படுத்துதல், குளங்கள் பராமரிப்பு, பாபநாசம் காணி குடியிருப்பு மலைவாழ் மக்கள் மேம்பாட்டு பணி, கர்ப்பிணி பராமரிப்பு திட்டம் என சிறப்பாக பணியாற்றினார்.
கல்குவாரி விஷயங்களில் அரசியல்வாதிகளின் அழுத்தம் இருப்பினும் முறையாக செயல்பட்டார். அவர் திருநெல்வேலியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவிட்டதால் தொழில் வழிகாட்டி பிரிவில் மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். ஆனால் தென்காசி கலெக்டர் ஆகாஷ் மாற்றப்பட்டதில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. தென்காசி 2019 நவம்பரில் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
முதல் கலெக்டராக அருண் சுந்தர் தயாளன் தொடர்ந்து சமீரன், கோபாலசுந்தர்ராஜ் ஆகியோர் பணியாற்றினர். கலெக்டர் ஆகாஷ் ஜூன் 17ல் கலெக்டராக பொறுப்பேற்றார். 7 மாதங்கள் மட்டுமே அவர் பணியாற்றியுள்ளார். இருப்பினும் குறைந்த காலத்தில் விவசாயிகள் குறைகளுக்கு தீர்வு ஏற்படுத்தினார்.
மாநில அளவில் சிறந்த தேர்தல் அதிகாரிக்கான விருது பெற்றார். குற்றாலம் மற்றும் செங்கோட்டையில் இயற்கையான அருவிகளின் குறுக்கே கட்டுமானங்கள் கட்டி நீர்வழிப் பாதையை தடுத்த நிறுவனங்கள் மீது நேரடியாக சென்று நடவடிக்கை எடுத்தார்.
தகுதியானவர்கள் நியமிப்பு
மாவட்ட அளவில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நேர்மையான முறையில் நேர்முகத் தேர்வு நடத்தினார். அதற்காக சி.சி.டி.வி., கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. தகுதியானவர்களை நியமித்தார். தென்காசி மாவட்ட தி.மு.க., செயலாளர் சிவபத்மநாதன், தலையாரி தேர்வுக்கு முன்பாக நடந்த கட்சிக் கூட்டத்தில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் ஊராட்சி செயலாளர்களுக்கு ஒவ்வொரு பணியிடம் வீதம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இது பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதன் பிறகு நேர்மையான முறையில் ஆள் தேர்வு நடத்தியதால் கலெக்டருக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் கிடைத்தன. இருப்பினும் கலெக்டர் ஆகாஷ் தி.மு.க.வினருடன் இணைந்து செயல்படாததால் மாற்றப்பட்டுள்ளார் என பேச்சு உள்ளது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி இன்னமும் வளர்ச்சியில் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளது. மூன்று ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். மாநில சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் செயலராக இருந்த ரவிச்சந்திரன் இங்கு கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக வருவோருக்கு அந்த மாவட்டம் குறித்த புரிதல் ஏற்படுவதற்குள் மாற்றப்பட்டால் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை.