நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்; ஆனால் உண்மை அதுதான். சென்னை சென்ட்ரலுக்கு முன்பே துவக்கப்பட்டது, கோவை ரயில் சந்திப்பு.
வட இந்தியாவில் டெல்லியில் முதல் ரயில்வே ஸ்டேஷன் 1864ல் துவக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, போத்தனுாரில் ரயில்வே சந்திப்பு கட்டப்பட்டு திறக்கப்பட்டு விட்டது.
இந்தியாவின் முதல் பயணிகள் ரயில், பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையில் 34 கி.மீ., துாரத்துக்கு, 1853 ஏப்ரல் 16ல் இயக்கப்பட்டது. அன்றிலிருந்து பத்தாண்டுகளுக்குள் 1862 லேயே போத்தனுார் ரயில் சந்திப்பு உதயமாகி விட்டது.
அதன்பின் 1873ல் பிப்ரவரி 1 அன்று, கோவை நகருக்குள் ரயில்கள் நின்று செல்வதற்கான ரயில் நிலையம் நிறுவப்பட்டது. அதுதான் இன்றைய கோவை சந்திப்பு. அதற்குத்தான் இன்று வயது 150.

கோவை ரயில் நிலையம் துவக்கப்பட்ட சில மாதங்கள் கழித்தே, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் திறக்கப்பட்டது. அதற்குப் பின் 1917 வரையிலும் படிப்படியாக கோவை ரயில்வே ஸ்டேஷனில் பல்வேறு கட்டமைப்புகளும் வேகமாக உருவாக்கப்பட்டன. நகரின் தொழில் வளர்ச்சியிலும், வர்த்தகத்திலும் கோவை ரயில்வே ஸ்டேஷனின் பங்களிப்பு அதிகரிக்கத் துவங்கியது.
கடந்த நுாற்றாண்டில், கோவை ரயில்வே சந்திப்பு பயணிகள் சேவையிலும், சரக்கு வர்த்தகத்திலும் மகத்தான வளர்ச்சி பெற்றது. கோவையில் இப்போது இயக்கப்படும் பல்வேறு ரயில்களுக்கும் இதேபோல ஒன்றரை நுாற்றாண்டு வயதாகப் போகிறது என்பதே, நமது கோவை சந்திப்பின் பழம்பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும்.
இப்போது மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ், 1864 பிப்ரவரி முதல் தேதியிலிருந்து இயக்கப்படுகிறது என்பதே இதற்கு ஆகச்சிறந்த உதாரணம். இன்றைய நிலையில், கோவை ரயில்வே சந்திப்பு, தினமும் 130 ரயில் இயக்கங்களைக் கையாள்கிற ஏ 1 அந்தஸ்து பெற்ற ரயில்வே ஸ்டேஷனாக உயர்ந்துள்ளது.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில், சென்னை சென்ட்ரல், எக்மோர் ஸ்டேஷன்களுக்கு அடுத்ததாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில்வே ஸ்டேஷனாக உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தின் மொத்த வருவாயில் 45 சதவீத பங்களிப்பை வாரி வழங்குவது, கோவை சந்திப்புதான். கடந்த ஆண்டில் மட்டும், இந்த ரயில்வே சந்திப்பை ஒரு கோடி பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்திப் பொருட்களும், பல மாநிலங்களுக்கும் செல்வதும் இந்த ரயில் நிலையத்தில் இருந்துதான். ஆனால் ஒரு காலத்தில், கோவையிலிருந்து பயணத்தைத் துவங்கிய பல ரயில்கள், இன்றைக்கு கோவையை கடந்து செல்கிற ரயில்களாக மாறி விட்டன. கோவைக்குப் பின் துவக்கப்பட்ட பல ரயில்வே ஸ்டேஷன்கள், பிரமாண்டமான கட்டமைப்புடன் வளர்ந்து நிற்கின்றன.
ஆனாலும் என்ன பயன்?
கோவை ரயில்வே சந்திப்பு, இன்றைக்கும் தாலுகா தலைநகரத்து ரயில்வே ஸ்டேஷனைப் போன்ற தோற்றத்துடனும், கட்டமைப்புடனும்தான் இருக்கிறது. இதனை மேம்படுத்துவதற்கு, தெற்கு ரயில்வே இன்று வரை எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. பாலக்காடு கோட்டத்தில் துவங்கிய புறக்கணிப்பு, சேலம் கோட்டத்திலும் சிறப்பாகத் தொடர்கிறது.
கோவை சந்திப்பை ஒட்டி, மத்திய ஜவுளித்துறைக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் பயன்பாடின்றி, புதர் மண்டிய காடுகளாக மாறியுள்ளன. அந்த இடங்களை எடுத்து, கோவை சந்திப்பை பிரமாண்டமான கட்டமைப்புடன் மாற்றியமைக்கலாம்.
சந்திப்பின் முன்புறமுள்ள கட்டடங்களுக்கு மாற்று இடத்தை வழங்கி, இதே பகுதியிலேயே மேம்படுத்தலாம். ஆனால் இதற்கான முன்னெடுப்பை யாருமே செய்வதில்லை.போத்தனுாரிலும், கவுண்டம்பாளையத்திலும் பரந்து விரிந்த நிலம் இருந்தும், அங்கு ரயில்வே முனையம் அமைக்க வசதி வாய்ப்பிருந்தும், அதையும் செய்வதற்கு ரயில்வே நிர்வாகம் தயாராகயில்லை.
கட்டமைப்பு வசதிகளில்தான் இப்படி என்றால், ரயில் போக்குவரத்திலும் கோவை வஞ்சிக்கப்படுகிறது. கோவைக்கான ரயில் தேவைகள் குறித்து, காலம் காலமாக மனுப்போர் நடத்தியும் ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.
ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து, அகல ரயில் பாதை அமைத்த பின்னும், தென் மாவட்டங்களுக்கு போதிய ரயில்கள் இயக்கப்படவில்லை.
ஏற்கனவே இயக்கிய ராமேஸ்வரம் ரயிலைக்கூட இயக்க, அதிகாரிகளுக்கு மனமில்லை. துாத்துக்குடிக்கு ரயில், பெங்களூருவுக்கு இரவு ரயில், சென்னைக்குக் கூடுதல் ரயில், பொள்ளாச்சி பாசஞ்சர் ரயில் என ரயில் தேவைகளின் பட்டியல், ரயிலை விட நீளமாகவுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?
வந்தே பாரத் ரயில்களையாவது, இங்கிருந்து அதிகமாக இயக்க வேண்டுமென்ற கோரிக்கையும் ஏற்கப்படுமா என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், கோவை ரயில்வே சந்திப்பை மறுசீரமைப்பு செய்யவும், புதிய ரயில்களை இயக்கவும் இன்றைய பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிக்குமென்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது, இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது மத்திய அரசின் மகத்தான பொறுப்பு.
கோவையின் பழம்பெரும் ரயில்கள்!
கோவை ரயில்வே சந்திப்பிலிருந்து இயக்கப்பட்ட ரயில்களும், அவை துவக்கப்பட்ட காலமும்:
நீலகிரி எக்ஸ்பிரஸ் (சென்னை-கோவை) -1864 பிப்ரவரி 3
ஐலேண்ட் எக்ஸ்பிரஸ்(கோவை-பெங்களூரு) -1864 ஆகஸ்ட் 1
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (கோவை-ராமேஸ்வரம்) - 1914 பிப்.,24
மதுரை எக்ஸ்பிரஸ் (கோவை-மதுரை) -1915 அக்.15
திருச்சி எக்ஸ்பிரஸ் (கோவை-திருச்சி) -1922 டிசம்பர் 29
டீ கார்டன் எக்ஸ்பிரஸ் (இணைப்பு: ஊட்டி-கொச்சி) -1944 ஏப்ரல் 1
வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (மங்களூரு-சென்னை) -1965 ஏப்ரல் 1
கோவை எக்ஸ்பிரஸ் (சென்னை-கோவை) -1977 ஏப்ரல் 14
சேரன் எக்ஸ்பிரஸ் (கோவை-சென்னை) - 1984 ஜூலை 5.
-நமது சிறப்பு நிருபர்-