வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''உயர் கல்வி பயில தேசிய அளவில் 25 சதவீத மாணவர்களே வருகின்றனர். இதை 2035க்குள் 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது'' என சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
'ஜி -- 20' கல்விப் பணிக் குழு அரங்கில் அவர் அளித்த பேட்டி: அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உலக அளவில் சிறந்த கல்வியை உருவாக்க வேண்டும் என்பதே இந்த கருத்தரங்கின் நோக்கம். உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வி பெற வேண்டும் என்பது தான் இலக்கு.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு சவால்களை எதிர்கொள்கின்றன. அவற்றுக்கு தனித்தனியான தீர்வுகள் உள்ளன. ஒரு நாட்டின் தீர்வு மற்றொரு நாட்டின் சவால்களுக்கு உதவலாம். எனவே இந்த கருத்தரங்கு வாயிலாக சிறந்த தீர்வுகள் கிடைக்கலாம்.
தொழில் நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதால் ஆசிரியர்களை நேரடியாக சந்தித்து கல்வி பயிலும் அனுபவம் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற கருத்தும் உள்ளது.

தற்போது பரிமாணம் அடைந்த கல்வியை மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆன்லைன் முழுதும் தவறானது இல்லை; அதிக நன்மைகள் உள்ளன. இதன் வாயிலாக லட்சக்கணக்கான மாணவர்களை கல்வி சென்றடைகிறது.
இந்த ஆன்லைன் கல்வியிலும் மாணவர்களை நேரடியாக வரவழைத்து அவர்களுக்கான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது அடுத்த தலைமுறைக்கு சிறந்த கல்வியாக அமையும்.
கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் கல்வி பாதிக்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்தும் தொழில்நுட்பம் வாயிலாக கல்வியை எடுத்துச் சென்றன. அது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது கால போக்கில் தெரியும். பெரிய அளவில் தாக்கம் இருக்க கூடாது என்பதே அனைவரும் விருப்பம்.
கற்றல் திறன் வருகையை பொறுத்தவரை பள்ளியில் 100 சதவீதம் உள்ளது. உயர் கல்வியை பொறுத்தவரை அந்த வருகை 25 சதவீதம்தான் உள்ளது. ஆனால் இது தமிழகத்தில் 50 சதவீதமாக உள்ளது.
2035க்குள் உயர் கல்வி வருகை சதவீதத்தை தேசிய அளவில் 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.