வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, நுாறு ஆண்டுகள் பழமையான கோவில்களை இடித்திருக்கிறேன்' என, மதுரையில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய தி.மு.க., -- எம்.பி., டி.ஆர்.பாலு மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனரிடம், சைதாப்பேட்டை வழக்கறிஞர் ராஜாத்தி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: பழைய தஞ்சாவூர் மாவட்டம், திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு சொந்தமாக, திருமங்கலக்குடி சிவன் கோவில் உள்ளது. 1968ல் தி.மு.க., முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததும், இந்த கோவில் நிலங்கள் மீது கவனம் செலுத்தினர். கோவிலுக்குச் சொந்தமான, 20 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி, அதை வீட்டு மனைகளாக மாற்றி, பலருக்கும் விற்பனை செய்தனர். இதை எதிர்த்து, அதீன மடத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
குற்றச்சாட்டு
ஆனாலும், அதிகாரத்தை பயன்படுத்தி, கோர்ட் உத்தரவை செயல்படுத்த விடாமல் செய்து விட்டனர். இன்றளவிலும், குறிப்பிட்ட நிலத்தில் வீடு கட்டி பலரும் இருந்து வருகின்றனர். அதேபோல, தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருவர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஹிந்து கோவில் நிலத்துக்குச் சொந்தமான அந்த கிராம நிலங்களையும் கையகப்படுத்தினார்.
கடந்த 1980ல், திருச்செந்துார் முருகன் கோவிலில் நகை மதிப்பீட்டாளராக இருந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவர் கொல்லப்பட்டார். அதற்கு காரணம், தி.மு.க.,தான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தணிக்கை ஆய்வாளராக இருந்த வெங்கடாசலம் என்பவர், 1983ல் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது மர்ம மரணத்துக்கு பின்னணியிலும், தி.மு.க.,வினர் இருப்பதாக கூறப்பட்டது.

பெரும் அதிருப்தி
இப்படி பல விஷயங்களை ஆதாரங்களுடன் கூறலாம். அதாவது, ஹிந்து கோவில் நிலங்களை அபகரிப்பது, கோவில் சொத்துக்கள் மீது ஆசைப்படுவது, கோவில் நிர்வாகத்தில் தலையிடுவது என தி.மு.க.,வினர் மீது தமிழகம் முழுக்க புகார்கள் உள்ளன. இதனால், ஹிந்து மக்கள் பெரும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்நிலையில்தான், 'நுாறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஹிந்து கோவில்களை இடித்துள்ளேன்' என, வெளிப்படையாகவும், ஆணவத்தோடும், டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.
வணங்குவதற்குரிய இடங்களான கோவில்களை பாதுகாக்கும் சட்டம் 1991ல், நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் படி, நாட்டு சுதந்திரத்துக்கு முன்னதாக கட்டப்பட்ட எந்த கோவிலையும் இடிக்கவோ, அப்புறப்படுத்தவோ முடியாது.
நடவடிக்கை
'நுாறு ஆண்டுகள் பழமையான ஹிந்து கோவில்களை இடித்துள்ளேன்' என, டி.ஆர்.பாலு பேசியிருப்பது, குறிப்பிட்ட சட்டத்துக்கு எதிரானது. எனவேதான், டி.ஆர்.பாலு மீது வழக்கு போட்டு, அவரை கைது செய்ய வேண்டும் என, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் அளித்துள்ளேன். ஹிந்து கோவில்களை இடித்துள்ளதாக டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால், அக்கோவில்களில் இருந்த நகை மற்றும் பொருட்கள் எங்கே? அவற்றை கொள்ளையடிக்கும் நோக்கிலேயே கோவில்களை இடித்துள்ளார் என சந்தேகப்படுகிறேன்.
பார்லிமென்ட் உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு மீது நடவடிக்கை எடுக்க, ஒழுங்கு நடவடிக்கை குழு உள்ளது. அந்த குழுவிலும், டி.ஆர். பாலு மீது புகார் அளிக்க உள்ளேன். டி.ஆர்.பாலு மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போலீசை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராஜாத்தி கூறினார்.
-- நமது நிருபர் --