வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தொடர்பாக, அமைச்சர்கள் பேசியது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கே.பி.ராமலிங்கம், நாராயணன் திருப்பதி, முருகானந்தம், பால் கனகராஜ் ஆகியோர், நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து, அமைச்சர்கள் மீது புகார் அளித்தனர். அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மனு அளித்தார்.
பா.ஜ., - கே.பி.ராமலிங்கம்: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடக்காது என்பதற்கான ஆதாரங்களை வழங்கி உள்ளோம். அங்கே அமைச்சர்கள் ஒன்றுகூடி, எப்படி பணம் வினியோகம் செய்வது, ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்றும் பேசி உள்ளனர். ஒரு அமைச்சர், '5,000 ரூபாய் போதும்' என்கிறார்; மற்றொரு அமைச்சர், 'பத்தாது, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்' என்கிறார். 'தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை சரி செய்ய, முதல்வர் உரிய வேலைகளை செய்துள்ளார்' என்றும் அவர்கள் கூறியுள்ள 'வீடியோ, ஆடியோ' ஆதாரங்களை, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கி உள்ளோம்.

வலியுறுத்தல்
அமைச்சர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது, சட்டப்படி தவறு. அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தேர்தல் முறையாக நடக்க, அங்கு பணியாற்றும் வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். நடவடிக்கை எடுக்காவிட்டால், தலைமை தேர்தல் ஆணையம் செல்வோம். தேர்தல் அலுவலரிடம் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதாக, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும். அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் முறையாக செய்ய வேண்டும். பணம் கொடுப்பதாக உறுதி அளித்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பில், தேர்தல் நடத்த வேண்டும்.
அ.தி.மு.க., - ஜெயகுமார்: இடைத்தேர்தலில், தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகத்தை தடுத்து, தேர்தலை சுதந்திரமாக, நியாயமான முறையில் நடத்த வேண்டும் என மனு அளித்துள்ளோம். இடைத்தேர்தலில் தி.மு.க., அரசு, நிர்வாகத்தை முழுமையாக முடுக்கி விட்டு, குறுக்கு வழியில் போலியான வெற்றியை பெற, அனைத்து விதமான அத்துமீறல்களையும் அரங்கேற்றி வருகிறது.
புகார்
அமைச்சர் நேருவின் பேச்சை கேட்டவர்களுக்கு, இது தெரியும். முழுமையாக பணத்தை மட்டுமே நம்பி இருக்கும் அவரது பேச்சு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை தேர்தல் கமிஷன் கவனத்தில் வைத்து, நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும். தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதும் வகையில், தேர்தல் முடிவுகள் இருக்கும். களத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். தேர்தல் கமிஷன் அறிவித்த காலத்திற்குள், வேட்பாளர் அறிவிக்கப்படுவார். தி.மு.க.,வினர் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து, ஓட்டுச்சாவடியை கைப்பற்ற உள்ளதாக, தகவல் வந்துள்ளது; அதையும் புகாரில் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.