ஈரோடு : ''கவர்னரிடம் கூறி, 'வி.சி.,' பணியிடத்தை பன்னீர்செல்வம் நிரப்பட்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, தி.மு.க., கூட்டணி சார்பில், வீரப்பன்சத்திரத்தில் பணிமனை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லை என்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சொன்னார். அவருக்கும், கவர்னருக்கும் தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அவர், கவர்னரிடம் சென்று கேட்க வேண்டியது தானே...
கவர்னர் தான், நியமிக்கும் அதிகாரம் படைத்தவர். அதுபோல, அத்தியாவசிய மருந்துகள் இல்லை என பொதுவாக கூறுகிறார். எங்கு இல்லை எனக் கூறினால், அங்கு உடன் அனுப்ப தயாராக உள்ளோம்.
எந்த மருத்துவமனையில், எந்த மருந்து இல்லை என பன்னீர்செல்வம் கூறினால், உடனடியாக அந்த மருந்தை அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.