வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருத்தணி: திருத்தணி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் தொழில் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. மேலும், 600 வர்த்தக நிறுவனங்களுக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கியும், சீல் வைக்கும் பணியிலும் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் 13,500 வீடுகளுக்கு சொத்து வரியும், 1,825 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், தொழில் வரி, 114 வணிக வளாகங்களுக்கு குத்தகை இனம் வசூலிக்கப்படுகிறது.
இந்த வருமானத்தின் வாயிலாக நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம், குடிநீர் மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், சிலர் சொத்து வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இதனால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வரி இனங்கள் செலுத்துமாறு பலமுறை நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியும், வரி செலுத்தாததால், தற்போது, சொத்து வரி, 1.45 கோடி ரூபாயும், தொழில் வரி, 3 லட்சம் ரூபாய், குடிநீர் கட்டணம், 60 லட்சம் ரூபாய்; குத்தகை, 17.30 லட்சம் ரூபாய் உட்பட பிற வகை வரி இனம் என, மொத்தம், 3.10 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.
வரி செலுத்துமாறு நகராட்சி ஊழியர்கள் பலமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும், எச்சரிக்கை மற்றும் ஜப்தி நோட்டீஸ் வழங்கியும் கட்டடத்தில் ஓட்டியும் வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் ராமஜெயம் கூறியதாவது:
திருத்தணி நகராட்சியில், ஐந்து நாட்களில், 10 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், 600 கடைகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ஜப்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளோம்.
இதுதவிர வரி செலுத்தாத வீடுகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். மேலும், சொத்து வரி வசூலிப்பதற்கு மேலாளர் தலைமையில், 15 பேரும், குடிநீர் கட்டணம் வசூலிக்க, பொறியாளர், பணி மேற்பார்வையாளர் உட்பட நான்கு பேரும், குத்தகை இனங்கள் வசூலிக்க நகர அமைப்பு ஆய்வாளர் உட்பட மூன்று பேரும், தொழில் வரி வசூலிக்க துப்புரவு ஆய்வாளர் தலைமையில் இரண்டு பேர் என மொத்தம் நான்கு குழுக்கள் அமைத்து வரி இனங்கள் வசூலித்து வருகிறோம்.

நீண்ட ஆண்டுகள் வரி செலுத்தாத வீடுகள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தொடரப்படும். வரி இனங்கள் செலுத்துமாறு வாகனங்கள் வாயிலாக, 21 வார்டுகளிலும் மக்களுக்கு அறிவித்து வருகிறோம்.
எனவே குடிநீர் இணைப்புகளை துண்டிக்காமல் இருக்க நிலுவை வரிகளை செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்.தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் வரி செலுத்துவதற்கு வசதியாக கவுன்டர் திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரி இனம் ஆண்டு வருவாய் வசூல் தொகை பாக்கித்தொகை (கோடியில்)
சொத்து வரி --3.60- -2.15- -1.45
குடிநீர் கட்டணம்-- 0.70 --0.10 --0.60
குத்தகை வாடகை-- 0.45- -0.28- -0.17
தொழில் வரி --0.27 --0.24- -0.03.