வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட 7 முக்கிய அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் இன்று (பிப்.,1) தாக்கல் செய்தார். தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றியதாவது:
* கடந்த பட்ஜெட்கள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட்டாக இது அமையும்.
* உலக பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா விளங்குகிறது.
* நடப்பாண்டில் இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை காணும்; மற்ற நாடுகளை விட இது அதிகம் ஆகும்.
* இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருப்பதை உலக நாடுகள் ஒப்புக்கொள்கின்றன.
* இதர பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள், அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்டாக இது இருக்கும்.
* உலக பொருளாதார தரவரிசையில் 10வது இடத்தில் இருந்து இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியது.
* கடந்த 9 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது.
* உஜ்வாலா திட்டத்தில் 9.6 கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

* பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
* பிரதமரின் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு 2.2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது.
* உணவு தானிய விநியோகத்திற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.75 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
* பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* ஜி20 நாடுகளின் மாநாட்டில் இந்தியா தலைமையேற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம்
* 44.6 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
* ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைசி நிலை வரை வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாடு, தேசத்தின் வளங்களை பயன்படுத்துதலுக்கு முக்கியத்துவம், பசுமை வளர்ச்சி, இளைஞர்களின் ஆற்றல், நிதித்துறை வளர்ச்சி ஆகிய 7 முக்கிய அம்சங்களுக்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
* உலகிலேயே அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.
* விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஐதராபாத்தில் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்காக தனி நிறுவனம் உருவாக்கப்படும்.
* நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவு தளம் உருவாக்கப்படும்.
* தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் சேர்ந்து 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.
* விவசாய விளைபொருட்களை சேமிக்க பரவலாக்கப்பட்ட சேமிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.