செய்திகள் சில வரிகளில்... சேலம்

Added : பிப் 01, 2023 | |
Advertisement
செய்தி சில வரிகளில்மின் இணைப்பு பெட்டியில் தீஆத்துார்: நரசிங்கபுரம், 3வது வார்டில், குடிநீரை சுத்திகரித்து வழங்கும் இயந்திரம் உள்ளது. அதற்கு பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு பெட்டியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ், பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்தார். பின், நகராட்சி அலுவலர்கள், அப்பெட்டியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.காங்., பிரசார


செய்தி சில வரிகளில்
மின் இணைப்பு பெட்டியில் தீ

ஆத்துார்: நரசிங்கபுரம், 3வது வார்டில், குடிநீரை சுத்திகரித்து வழங்கும் இயந்திரம் உள்ளது. அதற்கு பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பு பெட்டியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ், பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்தார். பின், நகராட்சி அலுவலர்கள், அப்பெட்டியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.


காங்., பிரசார கூட்டம்

தலைவாசல்: வீரகனுாரில் காங்., சார்பில், இந்திய ஒற்றுமை பயணம் குறித்து பிரசார கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில், 150 நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெற்றிகரமாக முடித்துள்ளார். காங்., கட்சியுடன் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என, அக்கட்சியினர் பேசினர். மாவட்ட பொதுச்செயலர் சங்கரய்யா, வட்டார தலைவர்கள் வெங்கடேசன், உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


வீரகனுாரில் 52 மி.மீ., மழை

சேலம்: தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியதால் நேற்று முன்தினம் இரவு, சேலம் மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக வீரகனுாரில், 52 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. தலைவாசல், 23, கெங்கவல்லி, 20, தம்மம்பட்டி, 6, ஆத்துார், 2, ஏற்காட்டில், 1.8 மி.மீ., மழை பெய்துள்ளது. வரும், 3 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


அர்ச்சகருக்கு புத்தொளி பயிற்சி

சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், பிப்., 3 முதல், 6 வாரங்களுக்கு தினமும் மதியம், 1:00 முதல், 3:00 மணி வரை, சேலம் மாவட்ட கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பட்டாச்சாரியார், ஓதுவார் ஆகியோருக்கு தனித்தனி ஆசிரியர்களால் சைவம், வைணவம் தொடர்பான புத்தொளி பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர், அவர்கள் பணிபுரியும் கோவில் நிர்வாகத்திலிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று நேரில் வரலாம் என, சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார்.


பயணியர் ரயில் 1 மாதம் ரத்து
சேலம்: சேலம் - கோவை பயணியர் ரயில், பிப்ரவரி முழுதும் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாக அறிக்கை: கோவை - திருப்பூர் இடையே, இருகூர், சூலுார் ரயில்வே ஸ்டேஷன்களில் தண்டவாள பணி நடக்க உள்ளது. இதனால் பிப்., 1(இன்று) முதல், 28 வரை, சேலம் - கோவை மெமூ பயணியர் ரயில், இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.


தீர்த்தக்குட ஊர்வலம்

தாரமங்கலம்: தாரமங்கலம், தெசவிளக்கு ஊராட்சி வனிச்சம்பட்டியில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. சின்னப்பம்பட்டி பெருமாள் கோவிலில் தொடங்கிய ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


மனைவி விரட்டியடிப்பு
கணவர் மீது வழக்கு
சேலம்: சேலம், வீராணம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 32. இவரது மனைவி உஷா, 29. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள், இரு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் உஷாவின் ஜாதியை காரணம் காட்டி, சதீஷ்குமாரின் குடும்பத்தினர் விரட்டி அடித்துள்ளனர். இதுகுறித்து உஷா, வீராணம், அம்மாபேட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், சதீஷ்குமார், அவரது சகோதரர் உமாசங்கர், உறவினர்கள் குணசேகரன், மோனிஷா மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.



கமிஷனர் அலுவலகத்தில்
சென்னை வக்கீல் மீது புகார்
சேலம்: சேலத்தை சேர்ந்த வக்கீல் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள், 20 பேர், நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:

சென்னை, அம்பத்துாரை சேர்ந்த வக்கீல் சத்தியசீலன் மீது புகார்கள் குவிந்ததால், பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், பார் கவுன்சில் ஆப் இந்தியா துணைத்தலைவர் பிரபாகரன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து வக்கீல், பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.


பரோலில் வந்த
கைதி மீது வழக்கு

சேலம்: சேலம், அழகாபுரம், மிட்டாபுதுாரை சேர்ந்தவர் மோகன், 54. இவரை, 2011ல் அம்மாபேட்டையில் நடந்த வரதட்சணை வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றம், 10 ஆண்டு சிறை தண்டனை அளித்த நிலையில், கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து, கோவை, சிங்காநல்லுாரில் உள்ள திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஜன., 25 முதல், 29 வரை, 'பரோல்' மூலம் சேலம் வந்த இவர், நேற்று முன்தினம் சிறைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். சிங்காநல்லுார் திறந்தவெளி சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா புகார்படி, சேலம், அழகாபுரம் போலீசார், மோகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடுகின்றனர்.


நாரணம்பாளையத்தில்
நாளை அன்னை தேர் உலா

ஓமலுார்: ஓமலுார் அருகே நாரணம்பாளையம்புதுாரில் ஜெயராகினி தேவாலய பெருவிழா கடந்த, 25ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவில் தினமும் மாலை திருக்கொடி பவனி, திருப்பலி நடந்து வருகிறது. நாளை காலை, 8:15 மணிக்கு, சேலம் மறை மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் தலைமையில் மெழுகு திரி பவனி, ஆடம்பர பெருவிழா கூட்டு பாடற்பலி நடக்க உள்ளது. இரவு, 7:00 மணிக்கு வேண்டுதல் தேர் உலா, 11:00 மணிக்கு அன்னை அலங்கார தேர்பவனி நடக்க உள்ளது. வரும், 3ல் நன்றி திருப்பலி, கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.


முன்னாள்
படைவீரர்களுக்கு
8ல் குறைதீர் கூட்டம்
சேலம்: சேலம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர், தற்போது படையில் பணிபுரிவோரை சார்ந்தவர்களுக்கு சிறப்பு குறைதீர் நாள் கூட்டம், பிப்., 8ல் நடக்க உள்ளது.

கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்கில், காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடக்கும். அதை தொடர்ந்து முப்படை வீரர் வாரிய கூட்டம், மாவட்ட அளவில் நடக்க உள்ளது. அதனால் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவர்களை சார்ந்தோர், கோரிக்கையை, இரட்டை பிரதிகளில் எழுதி, கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஓங்காளியம்மன் கோவிலில்

இன்று தேரோட்டம்
ஓமலுார்: ஓங்காளியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம் நடக்கிறது.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே பல்பாக்கியில், இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ஓங்காளியம்மன், மகா மாரியம்மன் கோவில்கள் உள்ளன. தை தேரோட்ட விழாவையொட்டி, கடந்த, 17ல் பூச்சாட்டுதல், 19ல் கம்பம் நடுதல், நேற்று முன்தினம் சக்தி அழைத்தில் நடந்தது.
நேற்று ஓங்காளியம்மன், மகா மாரியம்மன் கோவில் மூலவர், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இன்று காலை பொங்கல் வைத்தல், சக்தி கரகம், மாலை, 4:00 மணிக்கு ஓங்காளியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. நாளை மாலை, 4:00 மணிக்கு மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம், நாளை மறுநாள் கரகம், காவடி, மாவிளக்கு பூஜை, 4ல் மஞ்சள் நீராட்டு, சுவாமி மெரமனையுடன் விழா நிறைவடையும்.
மகன் மாயம் தந்தை புகார்
காடையாம்பட்டி, பிப். 1-
காடையாம்பட்டி: கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி, 34. இவரது மனைவி ரேகா, 33. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கணவருடன் ஏற்பட்ட தகராறில் ரேகா தாய் வீட்டுக்கு சென்றார். நேற்று நடுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கும், இரண்டாவது மகன் நவநீதிகிருஷ்ணன், 11, வீட்டுக்கு வரவில்லை.
எங்கு தேடியும் காணவில்லை. மூர்த்தி நேற்று அளித்த புகார்படி தீவட்டிப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X