சேலம்: சேலம் மாவட்டத்தில், 4 மாதம் முதல், 8 மாத வயது முடியும் கிடேரி கன்றுகளுக்கு, தடுப்பூசி முகாம் பிப்ரவரி முழுதும் நடக்கிறது.
'புருசெல்லோசிஸ்' எனும் கன்று வீச்சு நோய் பாக்டீரியா கிருமிகளால் கால்நடைக்கு ஏற்படும் ஒருவகை நோய். இது ஆடு, மாடு போன்ற அசையூட்டும் பிராணிகள், நாய், குதிரைகளிலும் ஏற்படும். இறந்த நிலையில் கன்று பிறப்பது, நலிந்த கன்று, நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால் உற்பத்தி குறைவு போன்ற அறிகுறி தோன்றும். காளை, ஆட்டுக்கிடாக்களில் விரைவீக்கம், மூட்டு அழற்சி, மலட்டுத்தன்மை ஏற்படுத்தும். நாய்களுக்கும் கருச்சிதைவு, மூட்டு அழற்சி ஏற்படும். நாட்டு மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு விரைந்து தொற்றும் தன்மை கொண்டது. இது மனிதர்களையும் தொற்றும்.
நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சுத்திகரிக்கப்படாத பால், இறைச்சி உட்கொண்டாலும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சுரப்புகள், உயிர்கழிவுகளோடு தொடர்பு ஏற்படும்போது நோய் பரவ வாய்ப்புள்ளது. அதேநேரம் மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு பரவ வாய்ப்பு குறைவு. கால்நடையை தாக்கும் இந்நோயை தடுக்க, 1.80 லட்சம், 'டோஸ்' வரப்பெற்று, சேலம் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தடுப்பூசி செலுத்தும் முகாம், பிப்.,1ல்(இன்று) தொடங்கி, மாதம் முழுதும் நடக்கிறது. தடுப்பூசி போடப்படும் கிடேரி கன்றுகளுக்கு அடையாள காதுவில்லை பொருத்தப்படும். ஒருமுறை தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுதும் எதிர்ப்புத்திறன் வெளிப்படும். நோயில் இருந்து கால்நடைகளை காக்கவும், மனிதர்களுக்கும் நோய் வராமல் தடுக்க வேண்டும் என, கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.