நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில், அரசுத்துறை அதிகாரிகள், நிர்வாக காரணங்களுக்கான, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்வது வழக்கம். ஆனால், தாசில்தார்கள், ஆண்டுக்கு ஒரு முறை இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், குமாரபாளையம் தாசில்தார்கள், எட்டு பேர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் தாலுகா குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சுரேஷ், ராசிபுரம் தாசில்தாராகவும், ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் தங்கம், குமாரபாளையம் சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த சின்னதம்பி, நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் தமிழ்மணி, நாமக்கல் அரசு கேபிள் 'டிவி' தனி தாசில்தாராகவும், நாமக்கல் ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மாதேஸ்வரி, நாமக்கல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பச்சைமுத்து, திருச்செங்கோடு தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய அப்பன்ராஜ், சேந்தமங்கலம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் பொறுப்பை, மணிகண்டன் கூடுதலாக கவனிப்பார். இதற்கான உத்தரவை, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் பிறப்பித்துள்ளார்.