மரங்களை வெட்டியவர்கள்
குறித்து போலீஸ் விசாரணை
தர்மபுரி: தர்மபுரி-சேலம் நான்கு வழிச்சாலையில், சாலையோரங்களில், ஏராளமான மரங்களை, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், பாளையம்புதுார் அருகே, நான்கு வழிச்சாலை அருகே உள்ள நான்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கொடுத்த புகார்படி, தொப்பூர் போலீசார், மரங்களை வெட்டியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
மது கடத்திய 3 பேர் கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசாருக்கு, தக்கட்டி-அஞ்செட்டி சாலையில், எரிசாராயம் கடத்தி செல்லப்படுவதாக, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
இதனால், அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, சீங்கோட்டை கிராமத்திற்கு மதுபானங்களை கடத்தி செல்வது தெரியவந்தது. ஆம்னி வேனை ஓட்டி சென்ற, சீங்கோட்டையை சேர்ந்த டிரைவர் பார்கேஷ், 19, உடனிருந்த முனுசாமி, 36, குமார், 32, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, திருமண நிகழ்ச்சிக்காக மதுபானங்களை கடத்தி செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, மதுபானம், பீர் என மொத்தம், 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 370 பாக்கெட் மதுபானம் மற்றும் ஆம்னி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயங்கிய இளம் பெண் பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை கீழ் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகள் தமிழரசி, 22; பி.காம்., பட்டதாரியான இவர், ஓசூர் அடுத்த உளிவீரனப்பள்ளியில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த, 26 இரவு அறையில் மயங்கி விழுந்தவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை முடிந்து சொந்த ஊரான ராயக்கோட்டைக்கு திரும்பி சென்ற தமிழரசிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் கடந்த, 28ல், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழரசி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளியில் நேற்று, கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தர்மபுரி கால்நடை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.முகாமில், பி.கொல்லஹள்ளி, காவேரியப்பன்கொட்டாய், குப்பன்கொட்டாய், தளவாய்ஹள்ளி உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி, குடற்புழு நீக்கம், கழிசல் தடுப்பூசி போடப்பட்டது.
இதில், அதிக பால்சுரக்கும் மாடுகள் மற்றும் அதை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடைத்துறை உதவி இயக்குனர்கள் மணிமாறன், சண்முக சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கல்லுாரி மாணவி மாயம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, கொரலதொட்டியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. ஓசூர் தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 28ல் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்ற மாணவி திரும்பி வரவில்லை.இதனால் அவரது பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், கொரலதொட்டியை சேர்ந்த பசவராஜ், 25, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மாதேஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம்
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அடுத்த காடுகெம்பத்பள்ளியில் உள்ள மலே மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கர்நாடகா மாநில வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் சோமன்னா, ஆச்சுபாலு பஞ்., தலைவர் மாதேவப்பா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சாராயம் விற்ற
2 பேர் சிக்கினர்
அரூர்: அரூர் அடுத்த மேல்தண்டாவில், வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன், 43, புதுக்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன், 58, ஆகிய இருவரையும் கைது செய்த கோட்டப்பட்டி போலீசார், அவர்களிடமிருந்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
பணிகளுக்கு பூஜை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், அரசகுப்பம் பஞ்.,ல், 11 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு மையம், கழிவு நீர் கால்வாய் மற்றும் திம்மசந்திரம் கிராமத்தில், 6 லட்சம் ரூபாயில் பல்நோக்கு மையம், லிங்கதீரணப்பள்ளியில், 5 லட்சம் ரூபாயில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை, ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் திம்மராயப்பா, துணை தலைவர் பாலாஜி, வார்டு உறுப்பினர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.
வேலைவாய்ப்பு முகாம்
தேர்வானவர்களுக்கு ஆணை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, காட்டிநாயக்கனப்பள்ளியில் இயங்கும் கிருஷ்ணா கல்வியியல் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரி தாளாளரும் முன்னாள் எம்.பி.,யுமான பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வள்ளி துவக்கி வைத்தார். தர்மபுரியை சேர்ந்த செந்தில் கல்வி நிறுவனத்தின் சார்பில், முதுநிலை முதல்வர் சீனிவாசன், முதல்வர் சுந்தரம் மற்றும் ஆசிரிய தேர்வு குழுவினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில், 100 மாணவ, மாணவியரின் தன் விவர குறிப்பு, ஆளுமை திறன், குழு விவாதம் உள்ளிட்டவற்றை பரிசோதித்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினர்.
கல்வியியல் கல்லுாரி முதல்வர் அமலோற்பவம், கல்லுாரி பேராசிரியர்கள், துணை தலைவர்கள் நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போதையில் பஸ் கண்ணாடி
உடைத்த மூன்று பேர் கைது
ஊத்தங்கரை; ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை அத்திப்பாடி பிரிவு ரோட்டில், குடிபோதையில் இருந்த இளைஞர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, திருவண்ணாமலையிலிருந்து வந்த அரசு பஸ் மீது கல்லை வீசி கண்ணாடியை உடைத்தனர். பஸ் மீது கல்லை வீசி சேதப்படுத்தியதாக, திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்துார் பகுதியை சேர்ந்த டிரைவர் பழனிவேல், 44, சிங்காரப்பேட்டை போலீசில் கொடுத்த புகார்படி, எஸ்.ஐ., பழனிசாமி வழக்குப்பதிவு செய்து, சிங்காரப்பேட்டை கென்னடி நகரை சேர்ந்த விஜயபிரகாஷ், 24, நவீன்ராஜ், 23, புருசோத், 19, ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கிறார்.
வீட்டில் புகுந்து நகை
திருடியவருக்கு காப்பு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, மல்லிப்பட்டி சாமியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு, 34; இவர் கடந்த, 28ல் வீட்டில் இல்லாதபோது, மர்ம நபர் ஒருவர், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 4 பவுன் நெக்லஸ், 3 பவுன் செயின், அறை பவுன் மோதிரம், 2, தோடு, கால் கொலுசு ஆகியவைகளை திருடிக்கொண்டிருந்தார். அப்போது, பிரபுவின் தாயார் அங்கு வருவதை பார்த்து, மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். சிங்காரப்பேட்டை போலீசில் பிரபு கொடுத்த புகார்படி, விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், 29, என தெரியவந்தது. நேற்று, சிங்காரப்பேட்டை எஸ்.ஐ., பழனிசாமி, சீனிவாசனை கைது செய்தார்.
டூவீலரில் இருந்து தவறி
விழுந்த டிரைவர் பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த நெரிகம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 45; டிரைவர். இவர் கடந்த, 29 மாலை பைக்கில் சென்றார். எட்ரப்பள்ளி ஏரிக்கரை அருகே வேப்பனஹள்ளி - தீர்த்தம் சாலையில் சென்ற போது, நிலை தடுமாறிய பைக் விபத்துக்குள்ளானது. இதில், வெங்கட்ராமன் உயிரிழந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கடை பூட்டை உடைத்து திருட்டு
மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த ராணிமூக்கனுாரை சேர்ந்தவர் கவுதமன், 34; இவர், மொரப்பூரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த, 14 இரவு, 9:00 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அடுத்த நாள் காலை, 8:00 மணிக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த, 13 ஆயிரத்து, 500 ரூபாய் மற்றும் 'சிசிடிவி' ஹார்டு டிஸ்க்கை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
யானை தாக்கி விவசாயி பலி
ஓசூர்: தளி அருகே, ஒற்றை யானை தாக்கி விவசாயி பலியானார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, உனிசேநத்தம் அருகே தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் லகுமய்யா, 53; விவசாயி. இவர், நேற்று மதியம், ஜவளகிரி வனச்சரகம், தளி காப்புக்காட்டில் உள்ள பங்களாசாரகம் வனப்பகுதியில், செம்மறி ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை, அவரை விரட்டி சென்று துாக்கி வீசி தாக்கியது. இதில் படுகாயமடைந்த லகுமய்யாவை மீட்ட உறவினர்கள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். தளி போலீசார் மற்றும் ஜவளகிரி வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
இருவார கோழிக்கழிச்சல்
நோய் தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் திட்டத்தில், மாவட்டத்தில் இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், இன்று தொடங்கி வரும், 14 வரை நடக்கிறது. கால்நடை பராமரிப்பு துறையினரால் மாவட்டத்தில் உள்ள, 2 லட்சத்து, 98 ஆயிரத்து, 800 நாட்டின கோழிகளுக்கு தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு தடுப்பூசி முகாம் மேற்
கொள்ளப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழு முகாமிட்டு, கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்களது கிராமங்களில் நடைபெறும் முகாமுக்கு, தங்கள் கோழிகளை கொண்டு வந்து கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி மருந்து போட்டு
பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தை கிருத்திகை
வழிபாடு
அரூர்: அரூர் கீழ்பாட்சாபேட்டையில் உள்ள ராஜமுருகன் கோவிலில், கிருத்திகை வழிபாட்டுக்குழுவினர் சார்பில், தை கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கவிப்பேரரசு கம்பன் கழகத் தலைவர் செவ்வேள் முருகன், அரசு, தண்டபாணி, சேகர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மா.திறன் மாணவர்களுக்கு
சிறப்பு மருத்துவ முகாம்
அரூர்; அரூர் நான்குரோட்டில் உள்ள பாட்சாபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், அரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை வகித்தார். இதில், டாக்டர்கள், மாணவர்களை பரிசோதனை செய்து, அடையாள அட்டை வழங்கினர். தொடர்ந்து அவர்களுக்கு கூடுதல் உதவி தொகை, உதவி உபகரணங்கள், பஸ் பாஸ் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
விவசாயிகளுக்கு ரூ.3,000 பென்ஷன்
நல்லம்பள்ளி: தமிழ் மாநில விவசாய தொழிற்சங்க, நல்லம்பள்ளி ஒன்றிய மாநாடு, நல்லம்பள்ளியில் நடந்தது. ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாதையன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பிரதாபன் பேசினார். இதில், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்தவர்களுக்கும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், அட்டை வழங்க வேண்டும்.தமிழகத்தில், 60 வயது கடந்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் மாதந்தோறும், 3,000 ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும். நல்லம்பள்ளியில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், இங்கு இதற்கான சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். டி.கானிகாரஹள்ளி, மானியதஹள்ளியில் உள்ள பட்டியல் இன மக்களுக்கு போதிய வீட்டு மனை வழங்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சரவணா எலெக்ட்ரிக்கல்ஸ் திறப்பு விழா
தர்மபுரி, பிப். 1-தர்மபுரி வாசன் கண் மருத்துவமனை அருகே, ஸ்ரீ சரவணா எலெக்ட்ரிக்கல்ஸ் திறப்பு விழா கடந்த, 27ல் நடந்தது. தர்மபுரி மாவட்ட கட்டுமான பொறியாளர்கள் சங்க நிறுவன தலைவர் கருணாகரன், திறந்து வைத்தார்.
சங்க தலைவர் தென்னரசு, உப தலைவர் மூர்த்தி, செயலாளர் விஜய், முன்னாள் தலைவர்கள் ரவி, மாரியப்பன், சங்க உறுப்பினர்கள் சக்திகுமார், கோவிந்தராஜ், பார்த்திபன், சந்தோஷ் மற்றும் சேலம் ஸ்ரீமுருகப்பா எலெக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் வேல்முருகன், தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், முன்னாள் எம்.பி., தீர்த்தராமன், ஸ்ரீராம ேஹாட்டல் உரிமையாளர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ சரவணா எலெக்ட்ரிக்ஸ் உரிமையாளரான ஓய்வு பெற்ற வேளாண்மை பொறியியல் துறை
கண்காணிப்பு பொறியாளர் கணேசன், மாலதி கணேசன் மற்றும் ராகவ்திலக் ஆகியோர், திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை
வரவேற்றனர்.