அரூர்: அரூர் அடுத்த எச்.தொட்டம்பட்டி பஞ்.,ல் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம், நேற்று நடந்தது. இதில், தலைவர், துணை தலைவர் மற்றும் பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தில், நாச்சினாம்பட்டியை சேர்ந்த சிலர், பஞ்.,ல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான வரவு, செலவு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில், ஒரு நாள் கூலித்தொகையாக அரசு சார்பில், 281 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், வேலை செய்தவர்களுக்கு, 160 ரூபாய் மட்டுமே அவர்களது வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளதாக புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பஞ்., நிர்வாகம் சார்பில், சரியான விளக்கம் கொடுக்கவில்லை. தொடர்ந்து, புகார் தெரிவித்தவர்களும், வேறு சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டம் பாதியில் முடிந்தது.