ஓசூர்: ஓசூர் வழியாக கர்நாடகா மாநிலத்திற்கு லாரியில், 20 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற டிரைவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சென்னை அடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்தவர் லோகநாதன், 50; லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு லாரியில் லோடு ஏற்றி சென்றார். கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் மதியம், 3:30 மணிக்கு லாரி சென்ற போது, திடீரென லோகநாதனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சர்வீஸ் சாலையில் லாரியைநிறுத்தினார்.
அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு தண்ணீர் கொடுத்த நிலையில், நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதால், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்தனர். ஆனால் அதற்குள் லோகநாதன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதற்கிடையே, லாரியில் இருந்த லோடை ஹட்கோ போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை
செய்த போது, 20 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. கர்நாடகா
மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதால், ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், லாரி பதிவு எண்ணை வைத்து விசாரித்து
வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement