கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தொகரப்பள்ளி கிராமத்தில் பழமை வாய்ந்த கதிரியப்பா சுவாமி, சாக்கம்மன் சுவாமி, சான மலையப்பன் சுவாமி, ஒப்பலேஸ்வரர் சுவாமி, திருக்கோவில்கள் உள்ளன.
இக்கோவில்களுக்கு சொந்தமாக, 31.85 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், நீண்ட காலமாக துரைசெல்வம் என்பவரது குடும்பத்தினர் விவசாயம் செய்து வந்துள்ளனர்.
கடந்தாண்டு ஹிந்து அறநிலையத்துறையினர், கோவில் நிலங்களை அவர்களிடமிருந்து மீட்டு, கடந்த, 8 மாதங்களுக்கு முன், குத்தகைக்கு விட்டனர். அதில், கோவில் நிலத்தை, 97 ஆயிரம் ரூபாய்க்கு, அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் விக்னேஷ் மற்றும் ஊர்மக்கள் விவசாயம் செய்யலாம் என முடிவு செய்து குத்தகைக்கு
எடுத்தனர்.
குத்தகை தொகையில் ஊர்மக்கள், 23 பேர் தங்கள் பங்களிப்பாக, 36 ஆயிரத்து, 400 ரூபாய் வழங்கியுள்ளனர். ஆனால் குத்தகை எடுத்த ஸ்ரீராம் விக்னேஷ், ஊர்மக்களுக்கு நிலங்களை பிரித்து வழங்காமல் ஏமாற்றியதாகவும், அவரே நிலங்களில் விவசாயம் செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென
கூறினர்.
இதுகுறித்து, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'குத்தகை எவ்வாறு விடப்பட்டது என, விசாரித்து அதன்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.