ஈரோடு: இடைத்தேர்தலில் விதவிதமான 'கெட்டப்'கள், கோரிக்கைகளுடன் முதல் நாள் வேட்பு மனுத்தாக்கலுக்கு பலரும் வந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு, மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மாநகராட்சி பிரதான கட்டடத்தில், ஆணையர் அறையில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று துவங்கியது. ஆணையர் சிவகுமார் வேட்பு மனுவை பெற்றார். முதல் நாளில் பலர் விதவிதமான ஆடைகள், 'கெட்டப்'களுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பலரும் வந்தனர்.
* மதுரை மாவட்டம் செல்லுாரை சேர்ந்த சங்கரபாண்டியன், 38; துாண்டிலில் டம்மி ரூபாய் நோட்டுகள், மது ஒழிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசார நோட்டீசுடன் வந்தார். நீர் வள பாதுகாப்பு மற்றும் மக்கள் நல இயக்க நிறுவனராவார். இதுவரை இரண்டு தேர்தலில் போட்டியிட்டுள்ளார். ஆவண குறைபாட்டால் மனுத்தாக்கல் செய்யவில்லை.
* திருச்சி, உறையூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் ராஜேந்திரன், கண்டக்டர் சீருடை, 10 ரூபாய் நாணயமாக, 10 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தார். தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்தி நான்காவது முறையாக மனுத்தாக்கலுக்கு வந்தார். ஆவண குறைபாட்டால் மனு தாக்கல் செய்யவில்லை.
* மதுரை, ஆண்டிபட்டியை சேர்ந்த மாரியப்பன், 51, அவரது மனைவி இளையராணி, 45, மகள் சத்யா, 24, மூவரும் மனுத்தாக்கலுக்கு வந்தனர். மனுவில் குறைபாடு இருந்ததால், தாக்கல் செய்யாமல் திரும்பினர்.
* திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த அ.மனிதன், 55, பறவை இறக்கை விரித்தது போன்ற ஆடை அணிந்து, கருப்பு கண்ணாடியுடன், மனுத்தாக்கலுக்கு பின்நோக்கி நடந்து வந்தார். தன் வயது, 2 கோடியே, 89 லட்சத்து, 8,823 நிமிடம்; 1991 ஜூன், 14 முதல் உலக அமைதிக்காக பின்நோக்கி நடப்பதாகவும், 16 ஆண்டாக மவுன விரதம் இருந்ததாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல் உட்பட, 43 தேர்தலை சந்தித்துள்ளார். தான் ஜனாதிபதியாகும் வரை பின்நோக்கி நடக்க உள்ளதாக தெரிவித்தார். இவரும் வேட்பு மனு குறைபாட்டால் தாக்கல் செய்யவில்லை. பல 'கெட்டப்'களில் மனுத்தாக்கல் செய்ய வந்தவர்களால், மாநகராட்சி வளாகம் கலகலப்பாக காணப்பட்டது.
Advertisement