கரூர்: கரூர் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே நேற்று 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சி கவுன்சிலர்களின் சாதாரண மற்றும் அவரச கூட்டம் மேயர் கவிதா தலைமையில் நேற்று நடந்தது. இதில், 1வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் சரவணன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:
மேயர் கவிதா:அ.தி.மு.க., ஆட்சியில், சாலை அமைக்காமல், 1.50 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ்: கரூரில் சாலை அமைக்காமலே, சாலை அமைத்ததாக கூறி, ஏமாற்றியதை ஆதாரத்துடன், முன்னாள் அமைச்சர் வெளியிட்டார். ஆனால், அ.தி.மு.க., ஆட்சிக்
காலத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு செய்ததாக இருந்தால், உங்கள் ஆட்சியில் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா.
இதை தொடர்ந்து, தி.மு.க.,- அ.தி.மு.க., கவுன்சிலர் இடையே, 'தள்ளுமுள்ளு', கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பின், மேயர் கவிதா, அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷை, வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். மாநகராட்சி ஊழியர்கள், அவரை வலுக்கட்டயமாக வெளியேற்றி கதவை பூட்டினர்.
பின், மாநகராட்சி கூட்டம் தொடர்ந்து நடந்தது.
Advertisement