கரூர்: வார்டு பணிகளுக்கான டெண்டர் விடும் தேதி குறித்த தகவல் முறையாக தெரிவிக்கப்படுவதில்லை என, கரூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கவலையுடன் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சி சாதாரண மற்றும் அவரச கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் கவிதா தலைமையில் நேற்று நடந்தது. இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
26வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், (தி.மு.க.,): வடக்கு கிழக்கு பருவமழை காலத்தில், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் துார் வாரும் பணி நடந்து. அந்த பணிகள் முறையாக நடை பெறவில்லை. தற்போது, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் துார் வாரும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இங்குள்ள, தெருக்களில் இயந்திரங்களை கொண்டு துார் வார முடியாது.
நக்கீரன் (மாநகராட்சி பொறியாளர்): தெருக்களில் ஆட்கள் மூலம் துார் வாரும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
17வது வார்டு கவுன்சிலர் சக்திவேல் (தி.மு.க.,): வார்டு பணிகளுக்கு டெண்டர் விடும் தேதி குறித்து தகவல் தெரிவிப்பதில்லை. டெண்டர் விடும் தேதியை, 15 நாட்களுக்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும்.
நக்கீரன்: இனி டெண்டர் விடும் தேதி முன்னதாக தெரிவிக்கப்படும்.
9வது வார்டு கவுன்சிலர் ஸ்டீபன்பாபு (காங்கிரஸ்): எங்கள் வார்டில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்ட பணிகள், அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. வடிகால் கட்டும் பணி பாதியில் நிற்கிறது.
மேயர் கவிதா: முறையாக பணி செய்யாத ஒப்பந்ததாரர்களின் வேலையை ரத்து செய்ய வேண்டும்.
11வது கவுன்சிலர் தினேஷ்குமார் (அ.தி.மு.க.,): வார்டில் உள்ள தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில், 119 தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
Advertisement