வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய வருமான வரி முறையை மக்கள் தேர்வு செய்யும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஒருங்கிணைந்த வளர்ச்சி, கட்டமைப்பு உள்ளிட்ட7 அம்சங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து பிரிவு மக்களையும் கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி பெற்று வருகின்றன.

தொழில்மயமாக்கலை மேம்படுத்த முயற்சித்துள்ளோம். அமிர்த கால பட்ஜெட் மூலம் தொழில்புரட்சி ஏற்படும். தொழில்புரட்சியை நோக்கி இந்தியா நகர்கிறது.
இந்த நாடு நேரடி வரி விதிப்பு முறை எளிமையாக்கப்பட வேண்டும் என காத்திருந்தது. இதன் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதற்காக கொண்டு வந்த புதிய வருமான வரி முறையானது, இப்போது, அதிக சலுகைகளை பெற்றுள்ளது.
இதனால், மக்கள் தயக்கமின்றி, பழைய முறையில் இருந்து புதிய நடைமுறைக்கு மாற முடியும். இதற்காக யாரையும் மத்திய அரசு கட்டாயப்படுத்தாது. பழைய நடைமுறையிலேயே தொடர வேண்டும் என நினைக்கிறவர்கள், அதனை பின்பற்றலாம்.
ஆனால், புதிய முறையில் பல சலுகைகள் உள்ளதால், அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இது எளிமையான, சிறிய வரி அடுக்குகளை கொண்டு உள்ளது. புதிய வருமான வரி நடைமுறையை மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தனி நபர் வருமான வரி விலக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
கையிருப்பில் உள்ள கோதுமையை சந்தைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அதன் விலை குறையும். பட்ஜெட்டுக்கு முன்பே, கோதுமை விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பணவீக்கம் குறைந்து வருகிறது. மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.