2023 - 24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு இதுவரையில்லாத அளவு ரூ.2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2013 - 14ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஒதுக்கீட்டைக் காட்டிலும் 9 மடங்கு அதிகம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அனைத்து அரசுகளும் ரயில்வேத் துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தந்து வந்துள்ளன. 2016-க்கு முன்பு வரை ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் அதனை முதன்மை பட்ஜெட்டுடன் இணைத்தனர். 2021ல் ரூ.1.4 லட்சம் கோடி ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ரயில்வே துறை, தற்போது அதிலிருந்து மீண்டுள்ளது. ரயில்வே துறையின் நடவடிக்கையால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பிரிவில் பழைய நிலைமை திரும்பியுள்ளது. பாசஞ்சர் ரயில் கட்டணம் அதிகரிப்பு, மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து போன்றவை மூலம் வருமானம் பெருகியது.
தற்போது ஒதுக்கப்பட்ட ரூ.2.4 லட்சம் கோடியில் வழக்கமான பணிகள் மற்றும் புதியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 100 போக்குவரத்து உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த உதவும். குறிப்பாக நிலக்கரி, உரங்கள் மற்றும் உணவுத் தாணியங்களை கொண்டு செல்ல அமைக்க உள்ளனர்.
ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, ஹும்சாபர் மற்றும் தேஜாஸ் போன்ற ப்ரீமியர் ரயில்களின் ஆயிரம் கோச்களை புதியதாக்க திட்டமிட்டுள்ளனர். ரயில்வேக்கான
நிதிகள் அதிக தொகை, பழைய ரயில்வே டிராக்குகளை மாற்றுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் வேகமாக இயங்கும். வந்தே பாரத் போன்ற ரயில்களை அறிமுகப்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
400 வந்தே பாரத் ரயில்கள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க இருப்பதாக கூறியுள்ளனர். ஸ்லீப்பர் கோச்சுகளுடன் வந்தே பாரத் 2.0 ரயில்கள் தயாரிக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உள்கட்டமைப்பு துறையில் அதிக தனியார் முதலீடுகளை ரயில்வே காணும் என்கின்றனர். இதற்காக, புதிதாக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு நிதிச் செயலகம், ரயில்வே, சாலை, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவும்.