உடுமலை : கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை ராகல்பாவி பிரிவில், கிராம இணைப்பு ரோடு சந்திப்பு உள்ளது. இப்பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன், சந்திப்பு பகுதியில், வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்லும் வகையில், தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள், வேகத்தை குறைத்துச்செல்லும் போது, கிராம இணைப்பு ரோட்டுக்கு வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடியும். இந்நிலையில், தற்போது தானியங்கி சிக்னல் செயல்படாமல், காட்சிப்பொருளாக மாறி விட்டது. தற்போது, அதே பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான அணுகுசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, ரோட்டின் ஒரு பகுதியில், வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
எனவே வழக்கத்தை விட, நெரிசல் அப்பகுதியில், அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. முக்கிய சந்திப்பு பகுதியில், நெரிசலையும், விபத்துகளையும் தவிர்க்க, தானியங்கி சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தேவையான எச்சரிக்கை பலகைகள் வைக்கவும், வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே போல், தேசிய நெடுஞ்சாலையில், ஆனைமலை ரோடு சந்திக்கும், முக்கோணம் பகுதியில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனைமலை ரோட்டில் வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் இணைய சிரமப்பட வேண்டியுள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தும் போது, பிற வாகனங்கள் விலகிச்செல்ல இடமிருப்பதில்லை.
இப்பிரச்னைக்கும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினரை ஒருங்கிணைத்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.