பொள்ளாச்சி : பொள்ளாச்சி எஸ்.பொன்னாபுரத்தில், ஆழ்துளை கிணறு புனரமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், மின் இணைப்பு கொடுக்கப்படாததால், பயன்பாடின்றி வீணாகிறது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், எஸ்.பொன்னாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, கலைஞர் காலனியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதி மக்கள் வசதிக்காக, 10 ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதன்பின், ஆறு ஆண்டுகள் வரை, ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை கிணறு பழுதடைந்ததால், எஸ்.பொன்னாபுரம் பகுதிக்கு செல்லும், குடிநீர் குழாய் இணைப்பில் இருந்து, குடிநீர் எடுக்கப்பட்டு கலைஞர் காலனிக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 2020 - 21ம் ஆண்டுக்கான, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், இரண்டு லட்சம் ரூபாய் செலவில், ஆழ்துளை கிணறு புனரமைக்கப்பட்டு, புதிதாக மின்மோட்டார் பொருத்தப்பட்டது. ஆனால், மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து, கலைஞர் காலனிக்கு குடிநீர் வினியோகம் செய்ய, வீடுகள் தோறும், புதிதாக குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கும் பணி, சமீபத்தில் துவங்கியது.
ஆனால், புனரமைத்து இரண்டு ஆண்டுகளாகியும், ஆழ்துளை கிணறு மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்காமல் உள்ளது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது, அரசின் நிதியை அதிகாரிகள் வீணாக்குவது போல் உள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனித்து, ஆழ்துளை கிணற்றையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.