உடுமலை : அதிக பனிப்பொழிவால், கத்தரி சாகுபடியில், நோய்த்தாக்குதல் அதிகரித்து, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பரவலாக கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டு ரக கத்தரி சாகுபடி பரப்பு குறைந்து, பெரும்பாலும் வீரிய ரக விதைகளே பயன்படுத்தப்படுகிறது. சிலர், நாற்றுப்பண்ணைகளிலிருந்து நாற்றுகள் வாங்கி, நடவு செய்யும் முறையை பின்பற்றுகின்றனர். இங்கு உற்பத்தியாகும் கத்தரி, பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக, கொண்டு செல்லப்படுகிறது.
நுண்ணீர் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளதால், ஆண்டு முழுவதும், இவ்வகை சாகுபடியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சீசனில், அதிக பனிப்பொழிவு காரணமாக, கத்தரி செடிகளில், நோய்த்தாக்குதல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கத்தரிக்காயில், அழுகல் நோய் மற்றும் துளைகள் விழுவது அதிகரித்துள்ளது. எனவே, சந்தைகளில் விற்பனை செய்ய முடியாமல், காய்களை வீசியெறியும் நிலை ஏற்பட்டுள்ளது.
பரிந்துரைப்படி மருந்து தெளித்தும், நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. சாகுபடியில் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உற்பத்தி பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்தால், விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.