உடுமலை : 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லி.,யில் நேற்று தாக்கல் செய்தார்.
இதுகுறித்து, உடுமலை மக்களின் கருத்துகள்:
வேளாண் வளர்ச்சி திட்டங்கள்
சி.மவுனகுருசாமி, வேளாண்மை விற்பனை குழு உறுப்பினர்:இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்கு, 2,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர் நிதி திட்டத்தின் கீழ், 11 கோடியே 40 லட்சம் விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும் தொடர அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு கோடி இயற்கை விவசாயிகள் உருவாக்கும் திட்டம், இயற்கை உரம் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாய கடன் 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள், இளைஞர்கள், தனியார் நிறுவனங்கள் இணைந்து வேளாண் வளர்ச்சிக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றிற்கு முழு கவனம் செலுத்த இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாற்று எரிசக்தி திட்டத்துக்கு, 19,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி
ஆ.அருண்பாண்டியன், உதவிப்பேராசிரியர், வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரி: புதிய வருமான வரி திட்டத்தின் கீழ், 7 லட்சம் ரூபாய் வரை, ஆண்டு வருமானம் உள்ள தனிநபருக்கு வருமான வரி இல்லை என்பது, நடுத்தர மக்களுக்கு ஏதுவாக அமைகிறது.
விவசாயக் கடன் செலவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும்.
பொறியியல் நிறுவனங்களில், 5ஜி சேவைகளைபயன்படுத்தி செயலிகளை உருவாக்க, 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும்.
அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பான் கார்டு, ஒரே வணிக அடையாளமாக மாற்றப்பட்டால், வணிக நிறுவனங்கள் மேம்பாடு அடையும். பட்ஜெட் வரவேற்கும் வகையில் உள்ளது.
தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை
டி. பாலமுரளி, விவசாயி, ஆண்டியூர்: உணவு உற்பத்தியை பெருக்கும் வகையில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதோடு, வேளாண் சார்ந்த தொழில்களில் விவசாயிகள் ஈடுபட்டு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும். ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், 2023ம் ஆண்டுக்குள், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், அங்கன்வாடி மையங்கள் மேம்பாடு என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், தொழில் என அனைத்து துறை வளர்ச்சிக்கும், முக்கியமாக இளம் தலைமுறையினர் தொழில் முனைவோராக மாற்றும் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
டிஜிட்டல் சார்ந்த வேலைவாய்ப்பு
சி.பிருந்தாதேவி, உதவி பேராசிரியர், விசாலாட்சி மகளிர் கல்லுாரி: விவசாயம் மேம்பாடு அடையும் வகையில், பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கும் வகையில், சிறந்த கல்வி நிறுவனங்களில் மையம் உருவாக்கப்பட்டால், மாணவர்களின் திறனை எளிதாகக் கண்டறிந்து டிஜிட்டல் சார்ந்த வேலைவாய்ப்பை எளிதாக அளிக்க முடியும்.
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், வேளாண் துறையில் 'ஸ்டார்ட் அப்' தொடங்க இருப்பது பெரும் வரவேற்புக்கு உரியதாகும்.
ஏகலைவா கல்வித்திட்டம்
எஸ்.ஸ்வர்ணகாந்தி, உதவி பேராசிரியர், வித்யசாகர் கலை அறிவியல் கல்லுாரி: அரசு நிர்வாக நடவடிக்கைகளை நம்பிக்கை அடிப்படையில் மேம்படுத்த 'ஜன்விஷ்வாஸ் மசோதா' கொண்டு வரப்பட உள்ளது. இதன் வாயிலாக ஊழலற்ற நிலை ஏற்படும்.
பழங்குடியின குழந்தைகளுக்கு பேருதவியாக 'ஏகலைவா' கல்வித்திட்டம் அமையும். இதன் வாயிலாக, அவர்களின் வாழ்வியல் சூழல் மாறுபடும்.
'ஏகலைவா' பள்ளிக்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதால், பலர் வேலைவாய்ப்பை பெறுவர். விவசாயத் துறையில் ஸ்டார்ட் -அப் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதால், அதிகப்படியானவர்கள் சுய தொழிலில் மேம்பாடு அடைவர்.
அதீத வளர்ச்சி ஏற்படும்
எம்.சாய்சரவணன், மேனேஜிங் டைரக்டர், ஸ்ரீ ஞானா குரூப்: மத்திய அரசின் பட்ஜெட் விவசாயம், தொழில், கட்டமைப்பு, கல்வி, மருத்துவம், கிராமப்புற மேம்பாடு, மக்கள் நலத்திட்டங்கள் என அனைத்து தரப்பு வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
முக்கியமாக இளம் தலைமுறை தொழிலதிபர்களை உருவாக்கும் வகையிலும், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் அமைந்துள்ளது. புதிய தொழில் முனைவோர்களுக்கு நிதி, முக்கியத்துவம் வாயிலாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; அனைத்து துறைகளிலும் இளைஞர்களின் குறிப்பாக பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.
மேக் இன் இந்தியா, செயற்கை நுண்ணறிவு திட்டம் வாயிலாக, விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களில் அதீத வளர்ச்சி ஏற்படும். மின்னணு நுகர்வு பொருட்களின் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.