நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்: 'பள்ளிக் கூடங்களை சீரமைக்க நிதி இல்லை' என்று தமிழக அரசு கூறும் நிலையில், கடலின் நடுவில் பேனா நினைவு சின்னம் அமைக்க, 81 கோடி ரூபாய் எங்கிருந்து வரும். வேண்டுமானால், கட்சி நிதியில் அறிவாலயத்தில் அமைத்துக் கொள்ளுங்கள்.
டவுட் தனபாலு: அது சரி... பள்ளிகளை சீரமைச்சு, நிறைய பேர் படிச்சு அறிவு வளர்ந்துட்டா, 'கடலுக்கு நடுவுல யாராவது பேனா சின்னம் அமைப்பாங்களா'ன்னு நாக்கு மேல பல்லு போட்டு கேள்வி கேட்டுடுவாங்களே... அதான், பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லைன்னு அரசு நழுவுகிறதோ என்ற, 'டவுட்' எழுதே!
lll
அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வேட்பாளராக நிற்க பலரும் முன்வருவதில்லை; பல காரணங்களை மனதில் வைத்து ஒதுங்குகிறீர்கள். 2021 தேர்தலின் போது போட்டியிட, எத்தனை பேர் விருப்ப மனு வழங்கினீர்கள்... யார் யார் வாயிலாக, 'சீட்' பெற முயற்சி செய்தீர்கள் என்று தெரியும். ஆனால், இடைத்தேர்தலில் ஒதுங்குவது என்ன நியாயம்?
டவுட் தனபாலு: உங்க ஆட்சியில எத்தனை இடைத்தேர்தல்கள்ல, ஜகஜ்ஜால வித்தைகள் காட்டி ஜெயிச்சிருக்கீங்க... அதே வித்தைகளை இப்ப இருக்கிற ஆளுங்கட்சியும் செய்யும்கிறது, 'அனுபவம்' வாய்ந்த உங்க ஆட்களுக்கு நல்லா தெரியும்கிறதால தான், பம்முறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
பத்திரிகை செய்தி: பொங்கலை முன்னிட்டு, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வழங்கியது. இவற்றை, 2.15 கோடி கார்டுதாரர்கள் வாங்கினர்; 4.39 லட்சம் பேர் வாங்கவில்லை. அவர்களுக்கு உரிய ரொக்கமான, 43.90 கோடி ரூபாயை கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைத்து வருகின்றன.
டவுட் தனபாலு: அரசு தர்ற இலவசத்தை வாங்காம யாரும் இருப்பாங்களா என்ற, 'டவுட்' எழுதே... அதனால, இந்த, 4.39 லட்சம் கார்டு தாரர்களும் உண்மையா இருக்காங்களா அல்லது போலி கார்டுகளா என்பதை, கூட்டுறவுத் துறை கள ஆய்வு செய்து உறுதிப்படுத்தணும்!
lll