கு.காந்தி ராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குஜராத் மாநிலத்தில், ௨௦௦௨ல் நடந்த கலவரம், மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த செய்தி நிறுவனமான, பி.பி.சி., வெளியிட்ட ஆவண படத்தை வைத்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகள், மீண்டும் பிரதமர் மோடிக்கு எதிராக பொய் பிரசாரத்தை துவக்கி இருக்கின்றன.
குஜராத்தில் நடந்த கலவரம், திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல; அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணித்த ரயில் பெட்டிகள், பயங்கரவாதிகளால் தீவைத்து எரிக்கப்பட்டதன் விளைவாகவே நடந்தது. குஜராத் கலவரத்திற்கு முன், நம் நாட்டில் நடந்த ஒரு பெரும் கலவரம் பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், குஜராத் கலவரத்தை அடக்க முதல்வராக இருந்த மோடி எடுத்த நடவடிக்கைகளின் தீவிரத்தை புரிய முடியும்.
கடந்த, ௧௯௮௪ல், பிரதமராக இருந்த இந்திரா,தன் சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உடன், நாடு முழுக்க வசிக்கும் சீக்கியர்களுக்கு எதிராக, காங்கிரஸ் ஆதரவாளர்களால் பெரும் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன; இதில், ௩,௦௦௦த்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
கலவரம் ஆரம்பித்த நான்கு நாட்களுக்கு பிறகே, ராணுவம் அழைக்கப்பட்டது. கலவரத்தில் காங்., கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. 'ஒரு பெரிய ஆலமரம் சாய்ந்தால், பூமி அதிரத்தான் செய்யும்' என, சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை, நியாயப்படுத்தி பேசினார், இந்திராவின் மகனான ராஜிவ்.
ஆனால், குஜராத் கலவரத்தின் போது, கலவரம் துவங்கிய முதல் நாளிலேயே ராணுவம் வரவழைக்கப்பட்டது; கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்; 250க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.
குஜராத் கலவரத்தை, மோடி எந்த இடத்திலும், என்றும் நியாயப்படுத்தி பேசியதில்லை. குஜராத் கலவர வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றமும், மோடி குற்றமற்றவர் என்றே தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பின், பி.பி.சி., நிறுவனம், குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது என்றால், அதன் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். இட்டுக்கட்டிய பொய் வாயிலாக, மோடிக்கு எதிராக மக்களை திசை திருப்பவே இவ்வாறு செய்துள்ளது.
வரும், 2024 லோக்சபா தேர்தலிலும், மோடி வெற்றி பெற்று பிரதமரானால், உலகின் தன்னிகரற்ற தலைவராக திகழ்வார்; நம் நாடும் பெரும் வல்லரசாக உருவெடுக்கும் என்பதும் உறுதி. அதை முறியடிக்கவே அன்னிய சக்திகள் சதி வேலைகளை ஆரம்பித்துள்ளன.
இதுபோன்ற, எத்தனை இட்டுக்கட்டியபொய் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், நாட்டின் முன்னேற்றத்தை விரும்பும் மக்களின் துணையுடன், தடைகளை கடந்து, மீண்டும் மோடி வெற்றி பெறுவார் என்பது நிச்சயம்.
lll
அரசியல் பண்பாளராக உலா வரும் அண்ணாமலை!
கே.ராமன்,
சிவகங்கையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: கல்வியில் சிறந்தவர்களை
கற்றோர்பலரும் விரும்புவர். அதேபோல, அரசியலில் பண்பு காத்து வரும், தமிழக
பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஐ.பி.எஸ்.,'பாஸ்' செய்து, காவல் துறை அதிகாரியாக
பணியாற்றியவர் என்பதை பலரும் அறிவர்.
ஆனால், அவர் சிறந்த
தொழிற்கல்வி பட்டதாரி என்பதும், கோவையில் இயங்கும் புகழ் பெற்ற
கல்லுாரியில், 2002 முதல், 2007 வரை, 'சேண்ட்விச் மெக்கானிக்கல்
ஜெனோகிரெட்ஸ்' என்ற, தொழில்நுட்ப கல்வி பயின்று தேறியவர் என்பதை அறியும்
போது, அவர் மீதான மதிப்பு அதிகரிக்கிறது.
அவரிடம் எளிமையும், அடக்கமும் மேலோங்கி காணப்படுகிறது.
தன்
தாய், தந்தையை மதித்து வாழும் அதே பண்புடன், கல்லுாரியில் தனக்கு பாடம்
கற்பித்த பேராசிரியர்கள் மற்றும் முதல்வரையும்,அவர் பெருமையாக பேசுவது
சிறப்பு. அத்துடன், தன் மனைவி பற்றியும், அவர் பெருமையாக பேசி
வருவது,அனைவரையும் மனம் நெகிழச் செய்கிறது.
அரசியல் என்றால் வேறு அர்த்தம் கொண்டு இருந்தவர்கள், தற்போது, அண்ணாமலையை பெருமையுடன் பார்க்கக் கூடிய கண்ணோட்டம் உருவாகியுள்ளது.
அமெரிக்க
முன்னாள் ஜனாதிபதி ஒருவர், 'அனைத்து மக்களும் அரசியல் பற்றி தெரிந்திருக்க
வேண்டும்' என்றார். தற்போது அவர் இருந்திருந்தால், 'அனைத்து மாணவர்களும்
அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்' என்று கூறியிருப்பார்.
'தாய்க்கு
பின் தாரம்' என, முன்னோர் குறிப்பிட்டு உள்ளனர். அதை உண்மை என
நிரூபிக்கும் வகையில், தன் வெற்றிக்கு பின்னால், தன் மனைவி இருக்கிறார்
என்ற உண்மையை, அண்ணாமலை உலகறியச் செய்துள்ளார்.
'இனி, இவர் தான்
நம்மவர்' என, எல்லாரும் விரும்பும் அரசியல் பண்பாளராக உலா வரும்
அண்ணாமலையின் அரசியல் பணி சிறக்க, ஒவ்வொருவரும் வாழ்த்த வேண்டும்.
lll
'குடி'யலாட்சியின் உளறல்களை சகித்தாக வேண்டும்!
ஊ.கதிர்வேல்கந்தன்,
திருச்செந்துாரிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: 'என் தொகுதியில்
இருந்த, சரஸ்வதி, லட்சுமி,பார்வதி கோவில்களை இடித்து விட்டேன்.
இருந்தாலும், ஹிந்துக்கள் ஓட்டை எப்படி பெற வேண்டும் என்று எங்களுக்கு
தெரியும்' என, தி.மு.க., பொருளாளர், டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.
தமிழக மக்கள் தெரியாத்தனமாக, தி.மு.க.,வினரிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டனர்.
அதனால்,
எந்தக் கோவிலை வேண்டுமானாலும் இடிக்கலாம்; யார் கையை
வேண்டுமானாலும்வெட்டலாம்; யாரையும் கல்லால் அடிக்கலாம் என, அராஜகத்தின்
உச்சத்திற்கு சென்று விட்டனர், தி.மு.க., அமைச்சர்கள்,
அக்கட்சியின்நிர்வாகிகள் மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்.
அதனால் தான், இப்படி தெனாவட்டாகப் பேசிஉள்ளார் டி.ஆர்.பாலு.
தமிழக
வாக்காளர்களின் ஓட்டுகளை எப்படி வாங்கலாம் என, 'திருமங்கலம் பார்முலா'
வாயிலாக, கேவலமான தந்திர வியூகத்தை நாட்டிற்கே அம்பலப்படுத்தியவர்கள்,
திராவிட செம்மல்கள் என்பதை நாடறியுமே. அந்தத் தேர்தல் புரட்சியின் தாக்கம்,
இன்று வரை ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்கிறது என்றால் மிகையில்லை.
கடவுள் எதிர்ப்புக் கொள்கையிலும், ஓட்டுகளை பெறும் தந்திரங்களிலும், விஞ்ஞான ஊழலிலும், தி.மு.க.,வினர் முதலிடம் பிடிக்கலாம்.
ஆனால்,
மனிதத்துவத்தை வேரறுத்து மிருகமாக மாறி விடாதீர்கள் தி.மு.க.,
நிர்வாகிகளே...! இதுவே, உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களின் வேண்டுகோள்.
தேர்தலின்
போது வாக்குறுதி அளித்தபடி விடியலாட்சி தர முடியாவிட்டாலும், 'டாஸ்மாக்'
மது விற்பனைக்கு, குடியரசு தினத்தில் பாராட்டு சான்றிதழ் கொடுக்கும்
அளவிற்கு, 'குடியலாட்சி'யை நடத்தி வருகிறார், முதல்வர் ஸ்டாலின்.
இந்த
குடியலாட்சியில், மது அருந்தியவன் போதையில் உளறுவது போல, மக்கள்
பிரதிநிதிகளும், அமைச்சர்களும் உளறியபடி தான் இருப்பர். அதை இன்னும், ௪௦
மாதங்களுக்கு நாம் சகித்துத் தான் ஆக வேண்டும்.
lll