''பதவி ஆசை காட்டி, வசூலை குவிச்சுண்டு இருக்கார் ஓய்...'' என்றபடியே, நாயர் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டார், குப்பண்ணா.
''ஆளுங்கட்சியிலயா வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''ஆமா... தி.மு.க.,வின் தொழிற்சங்கமான, தொ.மு.ச., இருக்கோல்லியோ... இதன் ஒரு அங்கமான, தொழிலாளர் அணியின் மாநில நிர்வாகி மீது தான் வசூல் புகார்கள் வர்ரது ஓய்...
''அதாவது, தொழிலாளர் அணிக்கு மாவட்ட வாரியா துணை, இணைன்னு பல பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கப்போறதா சொல்லி, வசூலை குவிச்சுண்டு இருக்கார்... இதுக்கு, கட்சி தலைமையிடம் அனுமதி வாங்கலை...
''இதுல வேடிக்கை என்னன்னா, தொழிலாளர்அணிக்கு மாவட்ட அளவுல நிர்வாகிகளை, இதுவரை நியமிச்சதே இல்லையாம்... மாநில நிர்வாகியின் இந்த அதிகப்பிரசங்கி செயலால, கடுப்பான சில தொழிற்சங்க நிர்வாகிகள், தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''செல்வராஜ் இங்கன உட்காரும்...'' என்ற அண்ணாச்சியே, ''நாம பணம் கட்டலைன்னா, 'கரன்ட் கட்' பண்ணிடுதாவ... இவங்க மட்டும் விதிவிலக்கா வே...'' எனக் கேட்டு நிறுத்தினார்.
''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''மின்சார கட்டணத்தை தனி நபர்கள் சரியான நேரத்துல கட்டுற மாதிரி, அரசுத் துறைகளும் கட்டணுமுல்லா... ஆனா, குடிநீர் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் மட்டும், 4,400 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம் பாக்கி வச்சிருக்கு வே...
''அரசு துறைகளின் மின் கட்டண பாக்கியை வசூல் செய்ய, மின் வாரியத்துல தனி பிரிவே இருக்கு... ஆனா, அவங்களோ நிலுவையை வசூலிக்க அக்கறை காட்டாம இருக்காவ... ஏற்கனவே நிதி நெருக்கடியில சிக்கி தவிக்கிற மின்சார வாரியத்துக்கு, அரசு துறைகளின் கட்டண பாக்கி, கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''நேரடி பிரசாரத்தை தவிர்க்கிறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''ஈரோடு கிழக்கு தொகுதியில போட்டியிடுற, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு அறிமுகம் தேவை இல்லைங்க... அதுக்காக, பிரசாரத்துக்கு போகாம இருக்க முடியுமா...
''ஆனாலும், மகன் இறந்த துக்கத்துல, கடுமையான மன அழுத்தத்துல இருக்காருங்க... அவருக்கு, 'வீசிங்' பிரச்னை வேற இருக்குதாம்... சமீபத்துல தான் இதய அறுவை சிகிச்சை வேற செஞ்சிருக்கார்... இதனால, சோர்வா இருக்காருங்க...
''துாசு ஆகாதுங்கிறதால வீதி வீதியாக, வீடு வீடாக போய் ஓட்டு கேட்கிறதை தவிர்க்கிறாருங்க... பொதுக்கூட்டம், அரங்க நிகழ்வுகள்ல கலந்துக்கிறதோட, முக்கிய பிரமுகர்களிடம் நேரிலும், போன்லயும் ஆதரவு கேட்கிறாருங்க...
''இதனால, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சோர்வடைஞ்சிட்டாங்க... 'வேட்பாளரை களத்துக்கு அழைச்சிட்டு போகாம பிரசாரம் எடுபடாதே'ன்னு பயப்படுறாங்க...
''அதே நேரம், இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை, பிரசாரத்துக்கு அழைச்சிட்டு போய், காங்கிரஸ்காரங்க சமாளிச்சுட்டு இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.