ஆமதாபாத்: ஆமதாபாத் போட்டியில் 168 ரன்னில் வெற்றி பெற்ற இந்திய அணி, 'டி-20' தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை வென்றது. பேட்டிங்கில் மிரட்டிய சுப்மன் கில் 126 ரன் குவித்து அசத்தினார்.
இந்தியா வந்த நியூசிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி அடுத்த போட்டியில் வெல்ல தொடர் 1-1 என சம நிலையை எட்டியது. மூன்றாவது, கடைசி போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடநதது.
![]()
|
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சகால் நீக்கப்பட்டு உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டார். நியூசிலாந்து அணியில் 95வது 'டி-20' வீரராக பெஞ்ஜமின் லிஸ்டர் அறிமுகம் ஆனார்.
திரிபாதி அபாரம்
இந்திய அணிக்கு சுப்மன் கில், இஷான் கிஷான் ஜோடி துவக்கம் கொடுத்தது. இஷான் கிஷான் 1 ரன்னில் அவுட்டானார். சுப்மனுடன் இணைந்தார் ராகுல் திரிபாதி. லிஸ்டர், பிரேஸ்வெல் பந்துகளில் பவுண்டரி விளாசிய சுப்மன், பெர்குசன் பந்தையும் விட்டு வைக்கவில்லை. மறுபக்கம் திரிபாதி தன் பங்கிற்கு பெர்குசன் பந்தில் பவுண்டரி அடித்தார். டிக்னர் வீசிய 5வது ஓவரில் சுப்மன், மூன்று பவுண்டரி விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 58 பந்தில் 80 ரன் சேர்த்த போது திரிபாதி (22 பந்து, 44 ரன்) அவுட்டானார்.
சுப்மன் விளாசல்
இந்திய அணி 10 ஓவரில் 102/2 ரன் குவித்தது. சுப்மன், 35 பந்தில் 50 ரன்னை எட்டினார். சூர்யகுமார் 24 ரன் எடுத்தார். தனது அதிரடியை தொடர்ந்த சுப்மன், லிஸ்டர், டிக்னர் ஓவர்களில் சிக்சர் மழை பொழிந்தார். பெர்குசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய இவர், 54 வது பந்தில் சதம் விளாசினார். இது இவரது முதல் சர்வதேச 'டி-20' சதமாக அமைந்தது.
பாண்ட்யா (30) அவுட்டானார். இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 234 ரன் குவித்தது. சுப்மன் (126 ரன், 7 சிக்சர், 12 பவுண்டரி), தீபக் ஹூடா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் சரிவு
கடின இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே ஆட்டங்கண்டது. பாண்ட்யாவின் முதல் ஓவரில் ஆலன் (3) அவுட்டானார். அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் கான்வே (1), சாப்மன் (0) அவுட்டாகினர். பிலிப்ஸ் (2), பாண்ட்யாவிடம் வீழ்ந்தார். உம்ரான் 'வேகத்தில்' பிரேஸ்வெல் (8) வெளியேற 21 ரன்னில் 5 விக்கெட்டை இழந்து திணறியது நியூசிலாந்து.
9 வது ஓவரை வீசிய ஷிவம் மாவியிடம், சான்ட்னர் (13), இஷ் சோதி (0) சரண் அடைந்தனர். மீண்டும் வந்த பாண்ட்யாவிடம் பெர்குசன் (0), டிக்னர் (1) சிக்கினர். கடைசியில் மிட்செல் (35) அவுட்டாக, நியூசிலாந்து அணி 12.1 ஓவரில் 66 ரன்னில் சுருண்டு தோற்றது. பாண்ட்யா அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.