புதுடில்லி : சம்பளதாரர்களுக்கு வருமான வரிச் சலுகை, பெண்களுக்கான புதிய திட்டங்கள், ராணுவம் - ரயில்வேக்கு கூடுதல் ஒதுக்கீடு என, வளர்ச்சியை இலக்காக வைத்து 2023 - 2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, உள்கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு திட்டப் பயன்களை பெறுவதற்கு 'ஆதார்' கட்டாயம்போல், பொருளாதார நடவடிக்கைகளுக்கு, 'பான்' அட்டை விபரங்கள் தருவது அத்தியாவசியமாகிறது. ஏழு முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாரித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அன்றைய தினம், 2022- 2023 ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2023 - 2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அடுத்தாண்டு பிப்.,ல் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும்.
இது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. மேலும் பொருளாதார மந்தநிலையால் பல நாடுகள் தத்தளித்து வருகின்றன. இந்தப் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கவும், ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூடியதாக இந்த பட்ஜெட்டை தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்தார். ஒரு பக்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதுடன், உள்கட்டமைப்புகளில் அதிகம் செலவிடுவது, தொழில்துறையினருக்கு ஊக்கம் அளிப்பதும் அவசியமானதாக அமைந்தது.
அடுத்தாண்டு லோக்சபாவுக்கும், இந்தாண்டில் ஒன்பது மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், வருமான வரிச் சலுகை உட்பட பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடையே இருந்தது.
இந்நிலையில், தன் ஐந்தாவது பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியதாக, அமிர்த காலத்துக்கான அடிக்கல்லாக, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கியதான பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக, 85 நிமிடங்களில் தன் பட்ஜெட் உரையை அவர், லோக்சபாவில் நேற்று வாசித்தார்.
ஆண்டு வருமானம், 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்பது அவருடைய பட்ஜெட்டின் முக்கியமான அறிவிப்பாகும். அடுத்து, பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், புதிய சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, உள்கட்டமைப்பு வசதிகள், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து வருகிறது. இது இந்த பட்ஜெட்டிலும் தொடர்ந்துள்ளது. ராணுவம், ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வருமான வரி
சம்பளதாரர்களுக்கான புதிய வருமான வரி முறையின் கீழ், ௭ லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை. இது தற்போது, 5லட்சம் ரூபாயாக உள்ளது. மேலும், வருமான வரி மீதான 'சர்சார்ஜ்' எனப்படும் உபரி வரி, 37 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிகபட்ச வரி விகிதம், 42.7 சதவீதத்தில் இருந்து, 39 சதவீதமாக குறைந்துள்ளது.
வரி விதிப்பை முறை எளிமையாக்கும் வகையில், வரி அடுக்குகள், 9ல் இருந்து 5ஆக குறைக்கப்பட்டுள்ளன.மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான முதலீட்டு உச்சவரம்பு இரட்டிப்பாக்கப்பட்டு, 30 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத வருவாய் முதலீட்டு திட்டங்களுக்கான வரம்பும், ௯ லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண்களை கவரும் வகையில், பெண்களின் பெயரிலான, 'மகிளா சம்மான்' என்ற சேமிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இரண்டாண்டுக்கான இந்த திட்டத்தில்,7.5 சதவீத வட்டி கிடைக்கும்.
* முதலீடு உயர்வு
பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தும் வகையில், உள்கட்டமைப்புகளில் அதிக முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொபைல்போன் பாகங்களுக்கான சுங்க வரிச் சலுகையை அறிவித்துள்ளதுடன், பசுமை எரிசக்தி மற்றும் ஏற்றுமதிக்கு ஊக்கம் தரும் வகையில், லித்தியம் பேட்டரிக்கான மூலதன முதலீடுகளுக்கு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில், மூலதன முதலீட்டுக்கான ஒதுக்கீடு, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, 33 சதவீதம் உயர்த்தப்பட்டு, 10லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, ஜி.டி.பி., எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தில், 3.3 சதவீதமாகும். இது, கடந்த, 2019- 20 ஒதுக்கீட்டைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
''இந்த பட்ஜெட் கடந்தாண்டு பட்ஜெட்டை அடித்தளமாக வைத்தும், நாட்டின், 100வது சுதந்திர தின ஆண்டை இலக்காக வைத்தும் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என தன் உரையின்போது நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
ரயில்வே துறைக்கு, 2.40 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த, 2013 - 2014 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது, 9 மடங்கு அதிகமாகும். இதுபோல் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரித்துள்ளன.
சிறு, குறு, மத்திய தொழில் துறையினருக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் உறுதி திட்டம், வேளாண் துறைக்கான கடன் இலக்கு, 20 லட்சம் கோடி ரூபாய் என, பட்ஜெட்டில் வரவேற்கக் கூடிய பல அறிவிப்புகள் வெளியிடப்ப்டுள்ளன.
பிரதமர் ஆவாஸ் யோஜனா எனப்படும், அனைவருக்கும் வீடு திட்டத்துக்கான ஒதுக்கீடு, 66 சதவீதம் உயர்த்தப்பட்டு, 79 ஆயிரம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
'மிகவும் குறைவான பட்ஜெட் பற்றாக்குறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீண்டகால பொருளாதார ஸ்திரதன்மை, பொருளாதார வளர்ச்சி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது' என, அமெரிக்காவைச் சேர்ந்த 'மூடிஸ்' என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சப்தரிஷிக்கள்ஏழு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்த அம்சங்களை, சப்தரிஷிக்கள் என அவர் குறிப்பிட்டார்.ஹிந்து சமயத்தில், அத்திரி, பாரத்வாஜர், ஜமதக்கினி, கவுதமர், காசியபர், வசிஷ்டர், விஷ்வாமித்ரர் ஆகியோர் சப்தரிஷிக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்கள் நான்கு வேதங்களையும் இலக்கியங்களையும் தங்கள் தவ வலிமையால் கற்றறிந்தவர்கள். சூரியன் வழிபடும் இந்த சப்தரிஷிக்கள், மிகவும் போற்றப்படக் கூடியவர்கள்.இந்த வகையில், பட்ஜெட் உரையில் நிர்மா சீதாராமன் கூறியதாவது:நாட்டின் 100 வது சுதந்திரத்தைக் கொண்டாட உள்ள 2047 ல், நம்முடைய நாட்டின் வளர்ச்சியை எதிர்நோக்கும் அடுத்த 25 ஆண்டுகள் அமிர்த காலமாக கருதப்படுகிறது.
இந்த அமிர்த காலத்தில் நம் நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளின் துவக்கம் இந்த பட்ஜெட் ஆகும்.இந்த இலக்கை நோக்கி அமைந்துள்ள பட்ஜெட், ஏழு முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டவை. இவை ஒவ்வொன்றும் தமக்குள் தொடர்புடையவை.அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைசி எல்லை வரைக்குமான வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, நம் ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்துதல், பசுமை வளர்ச்சி, இளைஞர்கள் சக்தி, நிதித் துறை ஆகியவை இந்த சப்தரிஷிக்கள்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.