மேட்டுப்பாளையம்: புங்கம்பாளையத்தில், தனியார் கம்பெனி கட்டி கொடுத்த, கழிப்பிடம் ஓராண்டாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் திறந்த வெளியை, கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புங்கம்பாளையத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கே ஊராட்சியின் சார்பில், கட்டிய மகளிர் கழிப்பிடம் பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் கழிப்பிடத்தின் அருகே, ஐ.டி.சி., கம்பெனி நிர்வாகம், சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடத்தை, கடந்த ஆண்டு கட்டி முடித்தது. இதில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக கழிப்பிட வசதிகள் உள்ளன. இக்கழிப்பிடத்திற்கு மின் இணைப்பும், தண்ணீர் வசதியும், மருதூர் ஊராட்சி நிர்வாகம் செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும். ஆனால் கழிப்பிடம் கட்டி முடித்து, ஓராண்டு ஆகியும், இன்னும் தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் இல்லாததால், கழிப்பிடம் திறக்காமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், கழிப்பிடம் செல்லும் பகுதியை, திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருதூர் ஊராட்சித் தலைவர் பூர்ணிமா கூறுகையில், மன்ற கூட்டத்தில், புங்கம்பாளையம் கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மின் இணைப்பு பெற, மின்வாரியத்தில் பணம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு பணிகளும் ஓரிரு வாரத்தில் செய்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிப்பிடம் திறக்கப்படும், என்றார்.